News Just In

9/05/2022 06:16:00 AM

எமது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு மிக்க பிரஜைகள் நாமே உறுதியுரை விழிப்புணர்வு நிகழ்வு!

எமது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு மிக்க பிரஜைகள் நாமே எனும் உறுதியுரை விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேசத்தில் சனிக்கிழமை 03.09.2022 முன்னெடுக்;கப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்துடன் இணைந்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கவும் சிறுவர்களை பாதுகாப்பதற்குமான இந்த விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா திருத்தலத்தை நோக்கிய வருடாந்த திருவிழா பாதயாத்திரை சனிக்கிழமை 03.09.2022 வவுணதீவு வழியாகச் சென்றபொழுது பாத யாத்திரையில் கலந்து கொண்ட பொதுமக்கள் இந்த உறுதியுரையிலும் கைச்சாத்திட்டனர். 2700 பேர் சிறுவர்களைப் பாதுகாப்போம் எனும் உறுதியுரைப் பிரகடனத்தில் கையெழுத்திட்டதாக அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் அலுவலர் அனுலா அன்ரன் தெரிவித்தார். இந்த செயற்பாட்டின் மூலம் சிறுவர் பாதுகாப்புக்கு நாமே பொறுப்பாளிகள் என்பதை ஒவ்வொரு பிரஜையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே பிரதான பரிந்துரையாக இருந்ததாக அனுலா மேலும் தெரிவித்தார்.

“எமது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு மிக்க பிரஜைகள் நாமே. இன்று நான் கையெழுத்திடுவதன் ஊடாக எமது சிறுவர்களின் பாதுகாப்பிற்காகவும் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கும் குரல் கொடுக்கும் பொறுப்புள்ளவர் என்பதை உறுதி செய்கின்றேன்.” என்று கையெழுத்திடும் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை “சிறுவர்கள் முன் மனிதர்களாவோம்” எனும் கூடார விழிப்புணர்வில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் “சிறுவர்களின் ஆளுமையில் அக்கறை செலுத்துவோம்> ஆற்றல் மிக்க எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவோம்> சிறுவர்களுக்கு எதிரான எந்த வன்முறையும் மனித குலத்திற்கு எதிரானது” என்பன உள்ளிட்ட பல்வேறுபட்ட வாசகங்களைத் தாங்கிய வசனங்கள் பதாதைகளில் எழுதப்பட்டிருந்தன.

பாதயாத்திரையில் சென்ற பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்துடன் இணைந்து தாக சாந்தி பானங்களையும் ஏற்பாடு செய்து இலவசமாக வழங்கி வைத்தனர்.

.எச்.ஹுஸைன் 

No comments: