News Just In

9/06/2022 06:24:00 AM

இலங்கையில் உணவு இல்லாமல் தவிக்கும் 55 இலட்சம் பேர்! சம்பிக்க!

இலங்கையில் தற்போது 55 இலட்ச மக்களை உணவிற்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் சட்டத்தின் முன்னிலைப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என பாட்டாளி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (05-09-2022) பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்ற புதிய லங்கா சுதந்திர கட்சி காரியாலய திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய ராஜபக்ஷக்களை நாட்டு மக்கள் புறக்கணித்தார்கள், ஆனால் தற்போது ராஜபக்ஷக்களை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சிகள் எடுக்கப்படுகிறது.

பெற்றுக்கொண்ட அரச முறை கடன்களை மீள செலுத்த முடியாது என இலங்கை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என பொருளாதார நெருக்கடியை கடுமையாகிய பசில் ராஜபக்ஷவின் (Basil Rajapaksa) தரப்பினர் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் உண்மையை குறிப்பிடாமல் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யுரைத்தமை பொருளாதார நெருக்கடிக்கு தீவிரமடைவதற்கு பிறிதொரு காரணியாக உள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பொதுஜன பெரமுன தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டது. நாட்டின் நிதி நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை.

மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் செயற்பட்டதால் இன்று 55 இலட்ச மக்கள் உணவுக்காக போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments: