News Just In

9/05/2022 06:32:00 AM

கனடாவில் பாரிய கத்திகுத்து தாக்குதல் -10 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்!

கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்மாகாணத்தின் ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் வெல்டன் உள்ளிட்ட 13 இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை தேடி வருவதாக றோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் ஒரு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

கனேடிய காவல்துறை தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. 31 வயதான டேமியன் சாண்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

"சந்தேக நபர்கள் கறுப்பு நிற நிசான் ரோக் [வாகனத்தில்] இருக்கலாம்," என்று றோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) அதிகாரி சஸ்காட்செவன் கூறினார், ஆண்களையோ அல்லது காரையோ பார்க்கும் எவரும் அவர்களில் இருந்து விலகி இருக்குமாறும் காவல்துறையை அழைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சஸ்காட்சுவானில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் நடத்தப்பட்ட தாக்குதல்களை "பயங்கரமான மற்றும் இதயத்தை உடைக்கும்" செயல் என்று விபரித்தார்.

அத்துடன் தாக்குதல் தொடர்பில் முதலில் தகவல் தெரிவித்தவர்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார். "நேசிப்பவரை இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றி நான் நினைக்கிறேன்," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.





No comments: