News Just In

7/04/2022 08:03:00 PM

கடன் மற்றும் குத்தகை (லீசிங்) மீளச் செலுத்துகையைப் பிற்போட இம்ரான் எம்.பி பிரதமரிடம் கோரிக்கை!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடன் பெற்றவர்களும் குத்தகைக்கு வாகனம் பெற்றவர்களும் அதனை மீளச் செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவே, கடன் மற்றும் குத்தகை (லீசிங்) மீளச் செலுத்துகையை குறித்த காலத்திற்குப் பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதமரும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் பல்வேறு அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களும் தனிப்பட்ட வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வங்கிகளில் கடன் பெற்று அதனை மீளச் செலுத்தி வருகின்றனர்.

இதேபோல வாகனங்களை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்தோர்களும் தவணை அடிப்படையில் அதனை மீளச் செலுத்தி வருகின்றனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களினதும் விலை அதிகரித்து மக்களின் வாழ்க்கைச்செலவு மிக அதிகளவில் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தமது நாளாந்த வாழ்வாதாரச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குக் கூட மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதேபோல வாகனங்களைப் பயன்படுத்தி தொழில் செய்வோர் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக நாட்கணக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்கி இருக்கின்றனர். இதனால் இவர்கள் வாகனங்களைத் தொழிலுக்குப் பயன்படுத்தி வருமானம் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலைமைகளை தாங்களும் அறிவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

நாட்டு மக்கள் தமது அன்றாட உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்யப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் இந்நிலையில் கடன் மற்றும் குத்தகைகளை மீளச் செலுத்துவதில் இதனோடு தொடர்பு பட்டவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு கடன் மற்றும் லீசிங் மீளச் செலுத்துகைகளை குறித்த காலத்திற்குப் பிற்போட ஏற்பாடு செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது விடயத்தில் தங்கள் அதிகபட்சம் கவனம் செலுத்துவதைப் பெரிதும் வரவேற்கிறேன். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்.முபாரக் 

No comments: