News Just In

7/19/2022 06:33:00 AM

இராணுவத்தினரின் நடவடிக்கையால் யாழ் எரிபொருள் நிலையங்களில் மக்கள் அதிருப்தி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான I.O.C எரிபொருள் நிலையங்களில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுவருகின்றது.

இந்த நிலையில், எரிபொருள் நிலையங்களில் விநியோக பணிகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

துண்டுச் சீட்டு வழங்கும் செயற்பாடுகளில் இராணுவத்தினர் பாரபட்சம் காட்டுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியிலுள்ள லங்கா I.O.C எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படுகின்றது.

இதன்படி நேற்று (18-07-2022) ஆயிரம் பேருக்கு துண்டுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

பின்னர் துண்டுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை முடிவுறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்த நிலையில், இராணுவத்தினர் மேலதிக துண்டுச்சீட்டுக்களை வழங்கியுள்ளனர்.

எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் வாகனங்களுக்கு இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்கள் பதிவுகளை மேற்கொண்டு, பற்றுச்சீட்டை வழங்குவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடம் மக்கள் வினவியபோது, தம்மைத் தவிர வேறு எவராலும் பற்றுச்சீட்டு விநியோகிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தமது வீடுகளுக்கு முன்பாக உள்ள பகுதிகளை எரிபொருள் வரிசைக்காக சிலருக்கு ஒதுக்கிவிட்டு, அதற்கான தரகுப் பணம் பெறப்படுவதாக குற்றம் சாட்டப்படிருந்த நிலையில், நெறியாள்கையின்றி இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமையும் மக்கறள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments: