News Just In

6/16/2022 06:32:00 AM

எரிபொருள் சிக்கல் தொடருமாயின் வைத்தியசாலையின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதமடையும்: குழந்தைவேல் ஜெகநீதன் (Video)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எரிபொருட்கள் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தாவிட்டால் வைத்தியசாலையின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதமடையும் நிலைக்கு செல்லும் என அரச தாதியர் சங்கத்தின் கிளைச்செயலாளர் குழந்தைவேல் ஜெகநீதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த நிலையில் அங்கு மக்களின் எதிர்ப்பு காரணமாக எரிபொருள் நிரப்பும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று மாலை எரிபொருள் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் மிக நீண்ட வரையில் பொதுமக்கள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த நிலையில் இன்று மாலை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்தவேளையில் வைத்தியசாலை ஊழியர்களும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்ததன் காரணமாக அவர்களுக்கான எரிபொருளை வழங்கமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

இதன்போது அங்கு வரவழைக்கப்பட்ட பொலிஸார் அப்பகுதியிலிருந்த பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றியதுடன் பாதுகாப்பினையும் பலப்படுத்தியிருந்தனர். பொதுமக்கள் தற்போதைய நிலையினை உணர்ந்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கு வழியேற்படுத்த வேண்டும் என அரச தாதியர் சங்கத்தின் கிளைச்செயலாளர் குழந்தைவேல் ஜெகநீதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



No comments: