News Just In

6/22/2022 11:38:00 AM

மொழி உரிமை தொடர்பான செயலமர்வு!




- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மொழி உரிமை மற்றும் சமத்துவத்தின் ஊடாக சமூக ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கையின் கீழ் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் (Eastern Social Development Foundation) ஏற்பாட்டில் மொழி உரிமை தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு கல்லடி ரிவியேரா விடுதியில் செவ்வாய்க்கிழமை 21.06.2022 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தீர்மானம் எடுக்கும் அந்தஸ்திலுள்ள அரச திணைக்க கூட்டுத்தாபன உயரதிகாரிகள், பொலிஸ் அலுவலர்கள், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரிகள், அதன் உறுப்பினர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், சமூக சேவைத் திணைக்கள அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

இலங்கையில் மொழி உரிமை தொடர்பில் முன்னெடுத்து வரும் திட்டத்தில் அரசியலமைப்புப் பின்னணி, மக்களுக்கான சுதந்திரம் சமத்துவம் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் நீதி உள்ளிட்ட விடயப் பரப்புக்களுடன் நீதியானதும் சமத்துவமானதுமான பல்லின சமுதாயத்தை ஆளுகை செய்வதன் அவசியம் குறித்து செயலமர்வில் தெளிவுபடுத்தப்பட்டது.

கொழும்பு பல்கலைக் கழக மனித உரிமைகள் நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் சட்டத்தரணியும் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஏ.எம். ஹக்கீம் வளவாளராக கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்.

நீதியான சமூக, பொருளாதார, கலாசார மேம்பாட்டுடன் வளப்பயன்பாடுகளையும் சிறந்த முறையில் மேற்கொள்ள ஆவன செய்வதே இந்த செயலமர்வின் நோக்கம் என்று நிகழ்வைத் துவக்கி வைத்த கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் திட்ட முகாமையாளர் பி. றேணுகாதேவி தெரிவித்தார்.

மொழி உரிமை மற்றும் சமத்துவத்தின் ஊடாக சமூக ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை எனும் இச்செயல் திட்டம் அம்பாறை, அனுராதபுரம், மட்டக்களப்பு, மன்னார், மொனறாகலை, புத்தளம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச கரும மொழிகள் அமுலாக்க திட்ட முகாமையாளர் எம். நூறுல் இஸ்மியா தெரிவித்தார்.

No comments: