News Just In

6/09/2022 09:15:00 PM

மின்சார வசதியின்றி வாழ்கின்ற குடும்பங்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கி வைப்பு!




அபு அலா -

நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வாழுகின்ற மக்கள் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அம்மக்களுக்கு என்னால் இயன்றளவு உதவிகளை செய்து வருகின்றேன் என்று குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்தார்.

நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வாழ்கின்ற வறிய குடும்பங்களுக்கு தவிசாளர் ஏ.முபாறக்கினால் இலவசமாக மண்ணெண்ணை வழங்கி வைக்கும் நிகழ்வு புல்மோட்டை உபபிரதேச சபைக் காரியாலயத்தில் இன்று (09) இடம்பெற்றது. இதன்போது அவர் கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் அன்றாடம் கூழித்தொழிலையும், பயிர்ச் செய்கையையும் நம்பி வாழுகின்றவர்களாக இருக்கின்றனர். அவர்களின் கஷ்டங்களையும், துன்பங்களையும் நான் அறிவேன். அவர்களுக்கு கஷ்டம் ஏற்படுகின்றபோது ஒரு பார்வையாளனாக ஒருபோதும் என்னால் இருக்க முடியாது. என்னை நம்பி வாக்களித்த மக்களை நான் கைவிடமாட்டேன்.

இன்று புல்மோட்டை பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கியுள்ளேன். அதேபோல் ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற மக்களுக்கும் வழங்கவுள்ளேன். அதனால் மிக வறிய நிலையில் வாழ்ந்து வருகின்ற குடும்பங்கள், பெண்களை தலைமைத்துவமாக் கொண்ட குடும்பங்கள், மின்சார வசதியின்றி வாழ்கின்ற குடும்பங்கள் அனைவரும் தங்களின் தகவல்களை புல்மோட்டை உப அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு தங்களுக்கான இலவச மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களை வேண்டுகிறேன் என்றார்.

குறிப்பாக, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கு பல நிவாரண உதவிகளை தவிசாளர் ஏ.முபாறக் வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எஸ்.நஸார், அமீன் பாரீஸ், முஹம்மட் பஸ்மிர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, புல்மோட்டை பிரதேச இலங்கை இராணுவ பதில் பொறுப்பதிகாரி, புல்மோட்டை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு மண்ணெண்ணையை மக்களுக்கு வழங்கி வைத்தனர்.


No comments: