News Just In

6/14/2022 07:46:00 PM

உள்ளூர் கலைஞர்களின் படைப்பில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது "அழகாய் ஒரு மாற்றம்" பாடல்

இந்திய சினிமா பாடல்களுக்கு நிகராக உள்நாட்டு கலைஞர்களின் படைப்பில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது "அழகாய் ஒரு மாற்றம்" பாடல்.

2016 இல் தேசிய அரச இசை விருதுகள் நிகழ்வில் "காற்றே என் வாசல்" பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்ற மட்டக்களப்பின் கலைஞர் சஞ்ஜித் லக்ஸ்மன் தயாரித்து இசையமைத்துள்ள அழகாய் ஒரு மாற்றம் பாடலானது கடந்த வெள்ளிக்கிழமை முதல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது.

இந்திய இசையமைப்பாளர்களான ஹரிஸ் ஜெயராஜ், விஜய் அன்டணி உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு 'ரப்' இசைத்துள்ள ஸ்ரீசரன் கஷ்தூரிரங்கன் இந்தப் பாடலுக்கும் தனது தனித்துவமான பாணியில் ரப் இசைத்துள்ளார்.

அத்துடன் பாடலாசிரியர் சதீஸ்காந்தின் வரிகளில் அமையப் பெற்றுள்ள இப்பாடலினை சஞ்ஜித் லக்ஸ்மன் உடன் இணைந்து மட்டக்களப்பு மண்ணின் பாடகி நிருஷ்கா பாய்வா தனது தனித்துவக் குரலால் பாடலின் பெரும்பாலான பகுதிகளை பாடியுள்ளதுடன், பாடலுக்கு மேலும் இனிமையும் சேர்த்துள்ளார்.

பாடலின் பெரும்பாலான பகுதிகள் இலங்கையின் கில்டன் மற்றும் பாசிக்குடா சுற்றுலா மையங்களில் பாடமாக்கப்பட்டுள்ளதுடன் 'ரப்' இசைக்குரிய காட்சிகள் அனைத்தும் ஜப்பான் நாட்டிலும் அந்நாட்டின் ஒளிப்பதிவாளர் அகிரா ஹயவா என்பவரின் உதவியுடன் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

கணவன் மனைவியின் 'தேநிலவு; எனும் தொணிப்பொருளை முன்நிறுத்தி வெளியாகியுள்ள இப் பாடலிற்கு நடன இயக்குனராக நரேஷ் நாகேந்திரன் பணியாற்றியுள்ளதுடன், அதற்கு ஏற்ப தத்ரூபமாக திகு அமல் தம்பதியினர் தமது நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பாடலின் காட்சிகளை முழுக்க முழுக்க நவீன தொழிநுட்பத்தின் துணையுடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இந்திய சினிமா பாடல்களுக்கு நிகராக ஜீ.ஆர்.ராதேயன் காட்சிப்படுத்தி ஒளிக்கலவையும் செய்துள்ளதுடன் அதனை நேர்த்தியான முறையில் அபிஷேக் சரண் ஒளித்தொகுப்பும் செய்துள்ளார்.

இந்திய சினிமா, இலங்கை ரசிகர்களை வெகுவாக ஆக்கிரமித்துள்ள நிலையில் உள்நாட்டு கலைஞர்களாலும் சர்வதேச தரத்தில், அவர்களுக்கு நிகராக படைப்புக்களை உருவாக்க முடியும் என்பதற்கு இவ் "அழகாய் ஒரு மாற்றம்" போன்ற பாடல்கள் சான்றாக அமைவதோடு உள்நாட்டு கலைஞர்களின் வாழ்விலும் முன்னேற்றகரமான ஓர் மாற்றத்தை கொண்டு வரும் என்பதிலும் ஐயமில்லை.

இப்பாடலானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே, இப்பாடலின் வரிகளை பலர் முணுமுணுத்து வருவதுடன், காட்சிகள் தொடர்பிலும் கலைஞர்களையும் தொழிநுட்ப குழுவினரையும் வெகுவாக பாராட்டியும் வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments: