News Just In

6/14/2022 08:02:00 PM

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி; முடங்கும் தனியார் பஸ்சேவைகள்!

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வரும் வெள்ளியன்று தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் எனவும் அனைத்து பஸ் உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலக நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

20% தனியார் பஸ்கள் (4,000) நாளை (15) மற்றும் வியாழன் (16) ஆகிய இரு தினங்களில், நாடு முழுவதும் இயங்கும் எனவும் கையிலுள்ள எரிபொருளைக் கொண்டு பஸ்களின் எண்ணிக்கை 3,000 ஆக மட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், வெள்ளியன்று பஸ்களை சேவையை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கத்துடனோ அல்லது வேறு எந்தக் கட்சியுடனோ பிரச்சினைகள் இல்லை எனவும் தற்போதைய எரிபொருள் நெருக்கடியே பிரச்கினை என்றும் குறிப்பிட்ட அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இது தொடரும் என்றும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதேசமயம் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் நேற்று போதியளவு டீசல் விநியோகிக்கப்பட்ட போதிலும் இன்றையதினம் (14) டீசல் வழங்கப்படவில்லை என்றார்.

எனவே எதிர்வரும் வாரங்கள் மிகவும் முக்கியமானவை எனவும் எரிபொருள் நெருக்கடி மாறாமல் இருந்தால், இந்த அரசாங்கம் மே 9 ஆம் திகதியை விட அதிக வன்முறை விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.

No comments: