News Just In

5/09/2022 02:43:00 PM

இந்த நாட்டிலே பூர்வீகக் குடிகளாக இருக்கின்ற எமது இனத்திற்கும் மதத்திற்கும் ஒரு அந்தஸ்து இல்லை : பாராளுமன்ற உறுப்பினர் - த.கலையரசன்.




நூருல் ஹுதா உமர்

மனிதன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்று சொல்லுவார்கள் அதுதான் இந்த நாட்டிலே இன்று நடந்துகொண்டிருக்கின்றது. தமிழர்களுக்கு இழைத்த வினை இந்த நாட்டின் தலைவர் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

அக்கறைப்பற்று கோளாவில் அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையின் ஓராண்டு நிறைவு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அக்கறைப்பற்று கோளாவில் அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையின் ஓராண்டு நிறைவு விழா கோளாவில் பல்நோக்கு மண்டபத்தில் பெ.சண்முகம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில், எமது சமூகத்திலே ஆன்மீகக் கருத்துக்களை எடுத்துச் செல்லக் கூடிய இளைஞர்கள் மிகவும் குறைவாக இருக்கின்ற காலகட்டத்தில் கோளாவில் பிரதேசத்திலே எமது இனம், மதம், சமூகத்திற்காக முன்நின்று உழைக்கும் இளைஞர்களைப் பார்த்து மிகவும் சந்தோசமடைகின்றேன். நிச்சயமாக இந்த இளைஞர்கள் எதிர்காலத்தில் நல்ல தலைவர்களாக எமது சமூகத்தை வழிநடத்துவார்கள். எமது தமிழுக்காவும், சமூகத்திற்காகவும், மதத்திற்காகவும் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றீர்களோ இதே அடிப்படையில் எமது மண்ணிலே தமிழ் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றது. அதற்கான பலத்தைச் சேர்ப்பவர்களாக நீங்கள் இருந்து கொண்டிருக்கின்றீர்கள்.

இந்து மதம் காலத்தால் முற்பட்டது. ஆனால் எந்த இடத்திலும் எமது மதத்திற்கான தனித்துவம் இல்லை என்பதுதான் இன்று ஒரு மனவேதனையான விடயம். இந்த நாட்டிலே பூர்வீகக் குடிகளாக இருக்கின்ற எமது இனத்திற்கும் மதத்திற்கும் ஒரு அந்தஸ்து இல்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க பல ஆலயங்கள் இன்று எமது மத ரீதியான அடையாளங்கள் அழிக்கப்பட்டு மாற்று மதத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வரலாறுகள் அதிகம் இருக்கின்றன. உதாரணமாக கதிர்காமத்தைச் சொல்லலாம். தேவார, புராணங்களில் பாடப்பட்ட கதிர்காமத்திலே தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது? தற்போதைய இந்த நாட்டின் அரச தலைவர் தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், தான் பெரும்பானன்மை மக்களின் வாக்குகளைப் பெற்றவன், இது ஒரு பௌத்த நாடு என்ற ஆணவப் போக்கினை அன்று ஆரம்பித்தார். ஆனால், இன்று அவரின் நிலை என்ன? நாட்டின் அனைத்து பக்கங்களிலும் அவருக்கான எதிர்ப்பலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அவர் நல்ல மனநோக்கோடு இந்த நாடடின் பொறுப்பை எடுக்கவில்லை. இந்த நாட்டை நாசம் செய்ய வேண்டும் என்றே தான் அவர் இந்த நாட்டின் தலைவராக உருவாக்கப்பட்டார். இன்று இந்த நாட்டை நாசம் செய்து அழித்த ஒரு தலைவராக அனைத்து இன மக்களாலும் பாக்கப்படும் தலைவராகவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச திகழ்கின்றார். தற்போது பாராளுமன்றத்தில் என்ன நடக்கின்றது என அனைவரும் அறிவார்கள். எமது இனத்தின் விடயங்களை நாங்கள் பேசுகின்ற போது நாட்டில் தற்போது பொருளாதார ரீதியான பிரச்சனைகள், நிருவாக நடைமுறைகள் சீராக இல்லை என்ற நிலைமைகள் எழுந்துள்ளன. ஒரு நாட்டுக்குப் பொருத்தமான ஒரு தலைவர் கிடைக்க வேண்டும். அவ்வாறானதொரு தலைவர் இலங்கைக்கு கிடைக்கப்பெறவில்லை. அதனால் நாங்கள் இன்று மோசமான துன்பங்களை அடைந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய மக்கள் நீண்ட காலமாக போராடி இனரீதியாக அழக்கப்பட்டு, மீள்குடியேற்றங்கள் இல்லாமல், ஜனநாயகம், நீதி என்பன இல்லாமல் இருந்த காலங்களையெல்லாம் நாங்கள் எண்ணிப் பார்க்கின்றோம். மனிதன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்று சொல்லுவார்கள் அதுதான் இந்த நாட்டிலே இன்று நடந்துகொண்டிருக்கின்றது. எங்களுக்கிளைத்த வினை இந்தா நாட்டின் தலைவர் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே, இந்த நாடு ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும். அதற்கு மூவின மக்களும் ஒன்றுபட வேண்டும். அந்த ஒற்றுமையின் மூலம் இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகி ஒரு பொதுவான ஆட்சி உருவாக்கப்படுகின்ற போதுதான் இந்த நாட்டின் பெருளாதாரம் மேலோங்கி வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

ஆனால், இதே நிலைமை நீடித்தால் போகின்ற போக்கில் எதிர்காலத்தில் அரச உத்தியோத்தர்களுக்குக் கூட சம்பளம் வழங்க முடியாத ஒரு நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இந்திய என்கின்ற நாடு நேசக் கரம் நீட்டவில்லை என்றால் இந்த நாட்டின் நிலை இன்னும் படு மோசமாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.


No comments: