News Just In

5/25/2022 11:44:00 AM

புலம் பெயர் தமிழர்களிடம் பிரதமர் ரணில் கோரிய உதவியை ஏற்றுக் கொள்ள முடியாது –சந்திரநேரு சந்திரகாந்தன்





இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளை மறந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்களிடம் உதவியை எதிர்பார்த்து நேசக்கரம் நீட்டியுள்ளதை ஒரு போதும் புலம் பெயர் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடக அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளர். குறித்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது டொலர் இன்மையால் நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இரு மடங்காகியுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் வெயிலிலும் மழையிலும் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கையின் நிலை இன்னும் மோசமடையலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்துக்கொள்ள புலம்பெயர் தமிழர்களிடம் உதவியை எதிர்பார்ப்பதாக நேசக்கரம் நீட்டியுள்ளமை வேடிக்கையாக உள்ளது.

வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் தீர்வின்றி பலவருடங்களாக தொடர்கிறது. மகனை இழந்த தாய்மார்களுக்கும் கணவனை இழந்த மனைவியும், தந்தையை இழந்த குழந்தைகளுக்கும் இன்னும் நீதி இல்லை. கேப்பாபுலவ மண் மீட்பு போராட்டம் தீர்வின்றி தொடர்கிறது. சட்டத்துக்கு முரணாக பிடிக்கப்பட்ட காணிகள் இன்னும் அந்த மக்களுக்கு மீள வழங்கப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் பொது மன்னிப்பு, விடுதலையின்றி காலம் கடந்தே செல்கிறது.

அதேவேளை வடகிழக்கில் ஒட்டுக்குழுக்களால் கொலை செய்யப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கும் முறையான விசாரணைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக அம்பாறையில் ஒட்டுக் குழுக்களால் அதிகமாக கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர் அதற்கான முறையான விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்படாது அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாகவே இன்னும் உலாவுகின்றனர்.

எனவே முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் அவர்களின் சொத்துக்களும் மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு ஒரே நாட்டுக்குள் இருக்கின்ற பூர்வீக இனத்தின் நியாயமான அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தேங்கிக்கிடக்கிறது. இவ்வாறன பிரச்சனைகளை காலத்துக்கு காலம் அரியணை ஏறும் அரசாங்கங்கள் காலம் கடத்தாது தீர்க்கின்ற போதே புலம்பெயர் தேசத்தின் மூதலீட்டுக்கான கதவுகள் திறக்கும் என்கின்ற அடிப்படை நியாயம் அறியாது தாயக பிரச்சனைகளை மறந்து புலம்பெயர் சமூகத்திடம் பிரதமர் உதவி கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments: