“எழுச்சி மிகு மாநகரம்” திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட கருவேப்பங்கேணி அம்புறூஷ் குறுக்கு வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் 6ம் வட்டார உறுப்பினராக இருந்த அமரர் வே.தவராஜா அவர்களின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய மாநகர சபையின் உறுப்பினர் சி.மேகராஜ் அவர்களினால் குறித்த வீதியானது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
மாநகர சபையின் 2.5 மில்லியன் ரூபா நிதியில் 280 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படி வீதியின் அபிவிருத்தி பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், கருவேப்பங்கேணி கிராம சேவையாளர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
பல காலமாக புணரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்பட்ட வீதியை அபிவிருத்தி செய்து தந்தமைக்கு வட்டார உறுப்பினருக்கும், மாநகர முதல்வருக்கும் குறித்த வீதியில் வசிக்கும் மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
No comments: