News Just In

5/02/2022 07:40:00 PM

கிழக்குப்பல்கலைக்கழக, சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற மாணவர் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஊடக அறிக்கை!!

கிழக்குப் பல்கலைக் கழக, சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 29.04.2022 அன்று நடந்த மாணவர் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாணவர்களால் வழங்கப்பட்டு பரவலாக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள செய்தியானது உண்மைக்குப் புறம்பானதும் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுமாக அமைகின்றது. எனவே மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்துவதும் இந்த விடயம் சார்ந்த பின்னணியினைத் தெரியப்படுத்துவதும் எமது பொறுப்பாகும்.

சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம் பெற்ற பகிடிவதை, வன்முறைகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக விசாரணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்வரும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் நிறுவக முகாமைத்துவ சபையின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட மாணவர்களுக்கு எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டன.
  1. மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஆண்கள் விடுதியில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி உடைக்கப்பட்டமை, இதனை உடைத்த மாணவர்கள் உடைக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிக்கான பெறுமதித் தொகையை சமமாகப் பிரித்துச் செலுத்துவதோடு குறிப்பிட்ட அம்மாணவர்கள் தொடர்ந்தும் விடுதியில் தங்கியிருக்க முடியாதென தடைவிதிக்கப்பட்டது.
  2. பகிடிவதையினை ஊக்குவித்தமை மற்றும் துணையாகச் செயற்பட்டமை - நான்காம் ஆண்டு மாணவர் ஒருவரின் வழிப்படுத்தலில் பகிடிவதை நடவடிக்கைகளுக்கு துணைபோகுமாறு முதலாம் வருட மாணவர்களைக் கட்டாயப்படுத்திய முதலாம் வருட மாணவர் மற்றும் வழிப்படுத்திய நான்காம் வருட மாணவர் ஆகியோருக்கு மூன்று வார காலத்திற்கு நிறுவகத்துக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
  3. பகிடிவதை மேற்கொண்டமை நான்காம் ஆண்டு மாணவரொருவர் பகிடிவதை என்ற பெயரில் முதலாம் ஆண்டு மாணவரைத் தாக்கியமைக்காக நிறுவகத்துக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இந்த விடயங்களையறிந்த மாணவர் ஒன்றியம், ஒழுக்காற்று நடவடிக்கைகளை எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட 29.04.2022 அன்றைய தினம் மாணவர்களை ஒன்று திரட்டி மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கைகளை வாபஸ் பெறுமாறும் குறிப்பிட்ட மாணவர்களை நிறுவகத்துக்குள் அனுமதிக்குமாறும் நிபந்தனையினை முன்வைத்து, பணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு
கோசம் எழுப்பியிருந்தனர். இது தொடர்பாக மாணவ ஒன்றியப் பிரதிநிதிகளை அழைத்து நிறுவகப் பணிப்பாளர், துறைத்தலைவர்கள், சிரேஸ்ட மாணவ ஆலோசகர் மற்றும் மாணவர் ஒன்றியப் பெரும்பொருளாளர் போன்றோரை உள்ளடக்கிய குழுவினர் பேச்சுவார்த்தைகளை நடாத்திக் கொண்டிருந்த வேளை, காரியாலயத்துக்கு வெளியில், பகிடி வதைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் முதலாம் வருட மாணவர்கள் சிலர் சிரேஸ்ட மாணவர்களால், பாரதூரமாகத் தாக்கப்பட்டனர். 

அதனைத் தடுக்க முற்பட்ட சிரேஸ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி.சு.சிவரெத்தினம் அவர்களும் நான்காம் வருட மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளானதோடு அவருடைய கைப்பேசியும் பறித்து உடைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணிப்பாளரும் உட்பட 10க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்களை இரவு 12 மணிவரை வெளியில் செல்லாதவாறு
காரியாலையத்துக்குள் வைத்துப் பூட்டியும் வைத்திருந்தனர்.

மேற்படி மாணவர்களால் இழைக்கப்பட்ட நீதிக்குப் புறம்பான வன்முறையினை மூடிமறைத்து தங்களுக்கு அனுதாபத்தை தேடிக் கொள்வதற்காகவும் மேற்கூறிய விடயங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் விரிவுரையாளர் ஒருவரினால் தாக்கப்பட்டதாக, விரிவுரையாளரைத் தாக்கிய மாணவர்களே ஊடகங்களுக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியதோடு வைத்தியசாலையிலும் தங்களை அனுமதித்துக்கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பாக 01.05.2022 அன்று கூடிய கல்விசார் அவைக்குழு மற்றும் முகாமைத்துவ சபை என்பன, நடந்தேறிய விரும்பத்தகாத செயல்களை நுட்பமாகப் பரிசீலனை செய்து மாணவர்களின் வன்முறை நடவடிக்கைகளைக் கண்டித்ததுடன் நிறுவகத்தில் சுமுகமான சூழலையும் விரிவுரையாளர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை எடுத்திருந்தன.
  1. 03.05.2022 காலை எட்டு மணிக்குள் நிறுவகத்துக்குள் இருந்து அனைத்து மாணவர்களும் வெளியேறுவதோடு மறு அறிவித்தல் வரை அவர்கள் உட்பிரவேசிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
  2. பல்கலைக்கழக கல்விசார் உறுப்பினர்களை உள்ளடக்காத சுதந்திரமான விசாரணைக் குழுவொன்று அமைக்கபட்டது.
  3. மேற்படி விசாரணைக் குழுவின் அறிக்கை ஒரு மாத காலத்துக்குள் முகாமைத்துவ சபைக்கு வழங்கப்படுதல் வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டது.
  4. விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தவறிழைத்தவர்களுக்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
துணைவேந்தர்,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.
02.05.2022.




No comments: