எதிர்வரும் நாட்களில் அரசாங்க மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணியிலிருந்து விலகி வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்குச் செல்லும் நிலை ஏற்படக் கூடும் என அரச மருத்துவர்கள் சங்கத்தின் பிரமுகர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக பெரும்பாலான மருத்துவர்கள் அரச பணியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் யோசனைப்படி அரச ஊழியர்கள் அவர்களின் அடிப்படைச் சம்பளத்துக்கு ஈடான தொகையொன்றையே மொத்தக் கொடுப்பனவுகளாக பெற முடியும்.
அதனை விட அதிகரித்த தொகையில் கொடுப்பனவுகளை வழங்க முடியாது. இந்தக் கட்டுப்பாடு காரணமாக தற்போதைக்கு அரசாங்க மருத்துவர்கள் மாதாந்தம் சுமார் 30 ஆயிரம் ரூபா வரையான கொடுப்பனவு இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
அவ்வாறான நிலையில் தொடர்ந்தும் அரசாங்கப் பணியில் ஈடுபடுவது தொடர்பில் அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மருத்துவர்களின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தங்கள் சங்கத்தின் மூலம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ள ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: