News Just In

5/12/2022 02:40:00 PM

வன்முறையாளர்களைக் கைது செய்யக் கோரி ஆடைத் தொழில்சாலை ஊழியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!



-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் புன்னைக்குடா வீதியை அண்டி அமைந்துள்ள மூன்று ஆடைத் தொழில்சாலைப் பணியாளர்கள் சுமார் ஐந்நூறு பேரளவில் வியாழக்கிழமை 12.058.2022 கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இம்மூன்று ஆடைத் தொழில்சாலைகளும் கடந்த செவ்வாய்க்கிழமை 10.05.2022 வன்முறைக் கும்பலால் தாக்கி சேதமாக்கப்பட்டது. அங்கிருந்த அதி நவீன ஆடைத் தொழில் இயந்திரங்கள் மின் பிறப்பாக்கிகள் ஜன்னல் கண்ணாடிகள் உட்பட ஏனைய உபகரணங்களும் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்தன. புன்னைக்குடா வீதியிலுள்ள ஒரு ஆடைத் தொழில்சாலை மீண்டும் இயங்க முடியாதளவிற்கு சேதமாக்கப்பட்டது.

இந்த மூன்று ஆடைத் தொழில்சாலைகளிலும் சுமார் 1600 இற்கு மேற்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து சமூக பெண்களும் ஆண்களும் பணியாற்றுகின்றனர் என அதன் பணியளார்கள் தெரிவிக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் வியாழக்கிழமை தளர்த்தப்பட்டதையடுத்து ஆடைத் தொழில்சாலைக்கு மீண்டும் பணிக்குத் திரும்பிய பணியாளர்கள் தமது ஆடைத் தொழில்சாலை சேதமாக்கி அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களைக் கைது செய்து செய்யுமாறு கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீதி நிலைநாட்டப்பட வேண்டும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் வன்முறையாளர்களை கைது செய். வன்முறை நிறுத்தப்பட வேண்டும். எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அரசியலுக்கும் ஆடைத் தொழிற்சாலைக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்கள் உள்ளிட்ட இன்னும் பல கோஷங்களைக் கொண்ட பதாதைகளை கவன ஈர்ப்பாளர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்.

தளவாய் லூத்தாஹ் ஆயத்த ஆடைத் தொழில்சாலையிலிருந்து புறப்பட்ட பணியாளர்கள் ஏறாவூர் பொலிஸார் வன்முறையாளர்களைக் கைது செய்ய வேண்டுமெனக் கோரி புன்னைக்குடா வீதி வழியே ஏறாவூர் பொலிஸ் நிலையம் வரை நடைபவனியாக இந்த கவனி ஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் இடைவழி மறித்த பொலிஸ் அதிகாரிகளும் படையினரும் கவன ஈர்ப்பாளர்களின் கோரிக்கையை ஏற்பதாகவும் முன்னதாகவே வன்முறையில் ஈடுபட்டோரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பலரைக் கைது செய்யும் தமது நுணுக்கமான நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்புக் கிடைத்து வருவதாகவும் சிசிரிவீ காணொளி ஆதாரங்களுடன் வன்முறைக் கும்பலைக் கைது செய்யும் சட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும் கவன ஈர்ப்புப் போராட்டக் காரர்களைக் கலைந்து செல்லுமாறும் வேண்டிக் கொண்டனர்.

இதனையடுத்து கவன ஈர்ப்புப் போராட்டக்காரர்கள் மீண்டும் தமது ஆடைத் தொழிற்சாலைகளுக்குச் சென்றனர்.









No comments: