இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் காரணமாக ஒட்டுமொத்த மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள சமூகப் போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் ஆட்சியாளர்கள் தமது பொறுப்புக்களை குறைத்து மதிப்பிடுவதும் புறக்கணிப்பதும் வருந்தத்தக்கது என PAFFREL சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மை குறித்து PAFFREL தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளது.
மக்கள் போராட்டம் ஜனநாயக கட்டமைப்பை உறுதிப்படுத்தினாலும், அது ஆட்சியாளர்களின் தோல்வியை உணர்த்துவதுடன் தற்போதைய பிரச்சினைக்கு அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் தீர்வு காண்பது அரச தலைவர், அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும்.
எவ்வாறாயினும், இதற்கான பொருத்தமான திட்டத்தையோ அல்லது வேலைத்திட்டத்தையோ அரசாங்கத்தினாலோ அல்லது நாடாளுமன்றத்தினாலோ முன்வைக்க முடியவில்லை என்பதுடன் குறைந்தபட்சம் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கூடவுள்ள நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும் இது மக்கள் பிரதிநிதிகளின் மீதான அதிருப்தியை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
அதேநேரம், நாடு கடுமையான பொருளாதாரப் படுகுழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதன் மூலம் உருவாகும் சமூக அமைதியின்மை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து நாட்டில் வன்முறைகள் உருவாகி மனித உயிர்கள் பலியாகுமானால் அந்த பொறுப்பில் இருந்து அனைவரும் தப்ப முடியாது. என PAFFREL தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments: