News Just In

4/02/2022 03:55:00 PM

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஆறு ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்


மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு அருகில் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் 6 பேர் பாதுகாப்பு பிரிவினரால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊடக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் , மத அமைப்புக்களும் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

தாக்குதல்களுக்கு இலக்கான, நியூஸ் ஃபர்ஸ்ட் ஊடகவியலாளர் அவங்க்க குமார, அத தெரண ஊடகவியலாளர்களான நிஸ்ஸங்க வேரப்பிட்டிய, பிரதீப் விக்கிரமசிங்க மற்றும் சுமேத சஞ்சீவ, உள்ளிட்ட ஆறு ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான சுமேத சஞ்சீவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிந்ததுடன், நிஸ்ஸங்க வேரப்பிட்டியவின் 400,000 ரூபாய்க்கு மேல் பெறுமதியான கமராவும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்கள் என அடையாள அட்டையை காட்டிய பின்னரும் கூட பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படைப் பிரிவினரால், தாம் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மூன்று ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: