மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் சீயோன் தேவாலயத்திலும் காந்திபூங்கா மற்றும் கல்லடி பாலத்துக்கருகிலுள்ள நினைவு தூபிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.05 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தல்களில் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்ட மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2019 ம் ஏப்பில் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளால் தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவலாயத்தில் போதகர் ரொசான் மகேசன் தலைமையில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி இடம்பெற்ற விசேட ஆராதனையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுபட்டு அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை மட்டு காந்தி பூங்காவில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மட்டு மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவான் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு தூபியில் மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மட்டு கல்லடி பாலத்துக்கு அருகில் தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் அமைக்கப்பட்ட தூபியில் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மலர்வைலையம் வைத்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் உயிரிழந்தவர்களுக்கு நீதிவேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments: