News Just In

4/06/2022 02:19:00 PM

வாகனத்தில் ஏறியது யார்? அனுர விளக்கம்!



பாதுகாப்பு தொடர்பில் முன்னெப்போதையும் விட அதிக அக்கறை கொண்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (05) பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது தனது வாகனத்தில் வெளிநபர் ஒருவர் நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அந்த சந்தர்ப்பத்தில் எனது வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் மறித்தனர். கடந்த 10 , 15 வருடங்களுக்கு முன்னர் நான் கூறியதைதான் நீங்கள் இன்று கூறுகிறீர்கள் என நான் அவர்களிடம் கூறினேன்.

இந்த நாட்டில் பட்டப்பகலில் படுகொலைகள் நடந்தன. இன்று கொலைக்காரன் இல்லை. தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை. இவையெல்லாம் நடக்கும் போது நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ. இன்று இந்த நேரத்தில் ஜனாதிபதி. எனவே அவரைப் பற்றிய அனுபவம் நமக்கு உண்டு.

எனவே, நாங்கள் தனக்குத்தானே எங்களது பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். நாங்கள் சுதந்திரமாக பாதையில் செல்கிறோம் என்று நினைக்கிறீர்களா? ஒவ்வொரு முறை நான் வாகனத்தில் செல்லும் போதும் எங்கள் கட்சித் தோழர்கள் பலர் சுற்றி இருந்து பாதுகாப்பு வழங்குகிறார்கள்.

நாங்களும் பாதுகாப்புடன் நடந்து கொள்கிறோம். பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும் முன் நான் வெளியே வருவதாக சகோதரர்களிடம் தெரிவித்தேன். உங்களில் சிலர் நில்லுங்கள். அதன்படி இருந்தனர். நான் நாளையும் அப்படியே செய்வேன். எமது உயிரை வீணாக விட முடியாது.

வாகனத்தில் செல்லும் போது விபத்தை ஏற்படுத்தி எமது உயிரை பறிக்க இவர்கள் நினைக்கக்கூடும்.அதனால் ஒரு சில மோட்டார் சைக்கிள்கள் எனது பாதுகாப்பிற்கு இருந்தது. தலைகவசத்துடன் ஒருவர் வந்து காரில் ஏறினார். அவர் எனது பாதுகாவலர். மழை காரணமாக அவரை எனது காரில் ஏற்றினேன்.


No comments: