இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சுமார் 1,000 தொழிற்சங்கங்கள் இன்றையதினம் (27-04-2022) ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதேவேளை, சில சுகாதார சேவை சங்கங்கள், ஆசிரிய அதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமது தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளதாக ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளைய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்ற போதிலும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதுமுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும், நாளைய தினம் மரக்கறி விநியோகம் இடம்பெறமாட்டாது என அகில இலங்கை ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்தக் கூட்டமைப்பின் தலைவர் அருண சாந்த இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆர்ப்பாட்டம் காரணமாக, மெனிங் சந்தை மற்றும் பல பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மரக்கறிகளை அனுப்ப வேண்டாமென விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய போராட்ட நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கருப்புப் பட்டி அணிந்து, தொழிலில் ஈடுபடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.
அதன் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
No comments: