- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
விவசாயத் திணைக்களத்தின் “பெறுமதிசேர் உணவுப் பதார்த்தங்கள் ஆரோக்கியமான உணவு” எனும் வேலைத் திட்டம் ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவில் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் தலைமையில் வியாழக்கிழமை 21.04.2021 இடம்பெற்றது.
கமக்காரர் மகளிர் சங்க மகளிர் விவசாயிகளுக்காக இடம்பெற்ற இந்நிகழ்வை மட்டக்களப்பு பெண்கள் விவசாய விரிவாக்க பாடவிதான உத்தியோகத்தர் குந்தவை ரவிசங்கர் நடத்தி வைத்தார்.
உள்ளுரில் கிடைக்கக் கூடிய நிலக்கடலை குரக்கன் கௌபி உழுந்து பயறு தானியங்கள் பருப்பு வகைகள் பழங்கள் மரக்கறிகள் உள்ளிட்ட பல விவசாய உற்பத்திகளைப் பயன்படுத்தி இங்கு ஆரோக்கியமான உணவுகள் தயாரிக்கும் செய்முறைப் பயிற்சிகள் இடம்பெற்றன.
நஞ்சு கலக்காத இயற்கை விவசாய முறையிலமைந்த பாரம்பரிய உள்ளுர் விவசாய விளைபொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்பதே இவ்வகையான விழிப்பூட்டலின் கருத்தாகும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
சிறந்த ஆரோக்கியமான இயற்கை முறையில் விளைந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுளை உட்கொள்ளாததன் காரணமாக தற்போதைய இளஞ் சமுதாயம் ஏதாவதொரு தொற்றாநோய்க்கு இலக்காகக் கூடிய நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அங்கு பயிற்சியின்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நளிம், செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் உட்பட இன்னும் பல துறைசார்ந்த அலுவலர்களும் கமக்காரர் விவசாய அமைப்பைச் சேர்ந்த பெண்களும் இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.
No comments: