புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது நேற்று காலை இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி, விக்டோரியா நுலாந்திடம் விளக்மளித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் பேச்சுக்களை நடத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவில் உள்ள பசுமைத் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவும் இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் கல்வி வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்திய உதவிச் செயலாளர், தனியார் துறையினரின் பங்களிப்புடன் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக உள்ளதாகவும், வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்த இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் திருத்தம் ஆகியவற்றுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்திக்கான சாத்தியங்களை விரிவுபடுத்துவதற்கு உதவுமாறு ஜனாதிபதி தூதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
No comments: