News Just In

3/22/2022 06:36:00 AM

நாட்டின் நெருக்கடிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நாட்டின் தலைமைகளும் அரசியல் தலைமைகளும் தடுமாறுகின்றன : நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்; கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்தில் உள்ள அறபா நகர் கிராமத்தில் புதிய ஆரம்பப் பாடசாலை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு உறுப்பினருமான நஸீர் அஹமட்டினால் ஞாயிற்றுக்கிழமை 20.03.2022 திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்தில் 27வது பாடசாலையாக அமையப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் கல்குடாத் தொகுதியின் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த மறைந்த முஹைதீன் அப்துல் காதரின் பெயரைத் தாங்கிய வண்ணம் இந்த புதிய வித்தியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் ஏ.யூ.எம். நளீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். உமர் மௌலானா பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.எப். றிப்கா ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். நௌபர் உட்பட இன்னும் பல கல்வியாளர்களும் பிரதேச முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், வாழ்க்கைச் செலவு உச்சக் கட்டத்திற்குப் போய் மக்களுடைய இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கின்ற ஒரு பயங்கரமான கால கட்டம். மக்கள் ஒரு வேளை உணவுக்காக போராடுகின்ற நிலைமை. நாட்டின் நெருக்கடிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகளும் தடுமாறுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து கடந்த 70 வருட காலமாக இந்த நாடு ஒரு தவறான அரசியல் வழி நடத்தலில் சிக்குண்டதான் விளைவாகத்தான் இப்பொழுது இந்த நாடு இந்த நிலைமைக்கு வந்து பாதிக்கப்பட்டு நிற்கின்றது.

நாட்டை விற்றால்ததான் கடன் சுமை தீருமென்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கின்றது. எந்த அரசியல் தலைமைகள் இந்த நாட்டை ஆண்டபோதும் கடன் தொகை கூடியதே தவிர குறையவில்லை. அதனால்தான் பாரிய சிக்கலுக்குள் இந்த நாடு அகப்பட்டிருக்கின்றது.

அதேவேளை இந்த நாட்டிலே இடம்பெறுகின்ற அரசியல் விடயங்களை முஸ்லிம் சமூகம் வெறுமனே பார்த்துக் கொண்டு பேசா மடந்தைகளாக இருந்து விட முடியாது.

ஐநா மனித உரிமைகள் தொடங்கி இந்திய பிராந்திய அரசியல் என்று காய் நகர்த்தல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை முஸ்லிம் சமூகம் உற்றுக் கவனித்து இராஜதந்திர ரீதியில் பல விடயங்களை காய் நகர்த்த வேண்டிய தேவை உள்ளது.” என்றார்.

நிகழ்வில் புதிதாக புதிய பாடசாலையில் இணைந்து கொண்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் புத்தகப் பைகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

புதிய பாடசாலை மாணவர்களுக்கு ஏடு தொடக்கும் நிகழ்வும் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் மாகாண முதலமைச்சராக இருந்த காலந்தொடக்கம் இன்றுவரை கல்விக்காக எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களை நிகழ்வில் கலந்து கொண்ட அநேகர் சிலாகித்துப் பேசி நன்றி தெரிவித்தனர்.

.எச்.ஹுஸைன் 









No comments: