News Just In

3/10/2022 04:12:00 PM

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் விரைவில் நியமனம் ?


கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார்.இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று(புதன்கிழமை) ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவந்திருந்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கு சட்ட ரீதியிலான சிக்கல் உள்ளதாக தெரிவித்திருந்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாக காணப்படுகிறது. இதனால் உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிப்பதில் சட்ட ரீதியான சிக்கல் நிலை உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எல்லை நிர்ணய சபைக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். எல்லை நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு அமைய, எந்த தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம், கல்முனையில் முழு அதிகாரத்துடன் கூடிய பிரதேச செயலகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இது குறித்து முன்னதாக தாம் வழங்கிய உறுதி மொழியினை காப்பாற்றும் எண்ணத்துடனேயே தொடர்ந்தும் செயற்படுகின்றோம்.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது, குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அவ்வாறெனில் தற்காலிகமாக பதில் கணக்காளர் ஒருவரையாவது நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த யோசனை தொடர்பில் ஆராய்வதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எனினும், குறித்த விவாதத்தின் நிறைவில் இரா.சாணக்கியனை சந்தித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இந்த விடயம் தொடர்பாக சில விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார்.

தமிழ், முஸ்லீம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அவர் இதன்போது சாணக்கியனிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: