நாடாளுமன்றத்தின் தேவைக்கு அமைய, நாடாளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும். எனினும், நாடாளுமன்றத்தின் தேவைக்கு அமைய, நாடாளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும்.
அதற்கு அரசியலமைப்பின் 71 ஆவது சரத்தின் அ பிரிவு வழி சமைத்துள்ளது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதியால் முடியும்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஒருவரிடம் காணப்படும் பட்சத்தில், ஜனாதிபதி அல்ல நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கும் நபரே பலம் மிக்கவராகக் கருதப்படுவார்.
அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்.
இது மிகவும் கடினமான விடயம். அதனை மேற்கொள்ள மக்களின் பேராதரவு கட்டாயம் தேவை. இந்தியாவிடமிருந்து கடன் கிடைப்பதால், ஏப்ரல் மாதமளவில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், கடன் வசதிகளுடாக கிடைக்கும் சலுகைகள் முடிவடைந்த பின்னர் மக்கள் வீதிக்கு இறங்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments: