News Just In

2/25/2022 07:11:00 AM

முதல் நாளில் 137 பேர் மரணம்: ரஷ்யாவை எதிர்த்துப் போரிட நாம் தனித்து விடப்பட்டுள்ளோம் - யுக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவை எதிர்த்துப் போரிட தமது நாடு தனித்து விடப்பட்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். நள்ளிரவுக்குப் பின்னர் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “எங்கள் அரசைப் பாதுகாப்பதற்காக நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எம்முடன் சேர்ந்து போராட எவரும் தயாராக இருக்கிறார்கள்? நான் எவரையும் பார்க்கவில்லை.

உக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமைக்கு உத்தரவாதம் அளிக்க யார் தயாராக இருக்கிறார்கள்? எல்லோரும் பயப்படுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

அத்துடன், தன்னை தமது முதன்மை இலக்கும் என்று ரஷ்யா அடையாளப்படுத்திய போதிலும், தானும் தனது குடும்பத்தினரும் உக்ரைனில் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கூறுகிறார்.

மேலும், அவர்கள் அரச தலைவரை வீழ்த்துவதன் மூலம் உக்ரைனை அரசியல் ரீதியாக அழிக்க விரும்புகிறார்கள்" என்றும் அவர் தனது உரையில் கூறியுள்ளார்.

இதேவேளை, இராணுவ தளங்களை மட்டுமே தாக்குவதாக கூறும் ரஷ்யா உக்ரைன் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள்என மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் இராணுவ வீரர்களும் பொதுமக்களும் அடங்குவர் என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷ்யா, யுக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள், அமைதியான நகரங்களை இராணுவ இலக்குகளாக மாற்றுகிறார்கள். இது தவறானதும் ஒருபோதும் மன்னிக்க முடியாததுமான செயல் என்றும் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக முழு இராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் இராணுவ அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 90 நாட்களுக்குள் முழு இராணுவத்தையும் திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான நிதியை ஒதுக்குமாறும் யுக்ரைன் அமைச்சரவையை ஸெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஷ்ய படைகளிடமிருந்து இருந்து நாட்டைப் பாதுகாக்க அனைத்து மக்களும் முன்வர வேண்டும் என்றும் அப்படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் ஸெலன்ஸ்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: