News Just In

1/26/2022 05:53:00 AM

பெரேண்டினா அரசசார்பற்ற நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட நிறைவு விழா அம்பாறையில்!

இலங்கையில் உள்ள சமூக அமைப்புக்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கிராமிய தொழில் முயற்சியாளர்களாக மேம்படுத்தல் தொடர்பான செயற்றிதிட்டத்தை அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வந்த 'பெரேண்டினா' அரசசார்பற்ற நிறுவனத்தின் நிறைவு விழா பெரேண்டினா நிறுவன திட்ட முகாமையாளர் எஸ்.சிவராஜா தலைமையில் அம்பாரை தனியார் ஹோட்டலில் நேற்று (25) இடம் பெற்றது.

இதன் போது கடந்த நான்கு வருட காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் பெரேண்டினா நிறுவனத்தினால் மாவட்டச் செயலகத்தின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 05 பிரதேச செயலகத்தின் ஊடான 15 கிராம சேவகர் பிரிவுகளில் தங்களது செயற்திட்டத்தை முன்னெடுத்து 300க்கும் அதிகமான சுயதொழில் முயற்சியார்களை உருவாக்கி உள்ளதாக பெரேண்டினா நிறுவன திட்ட முகாமையாளர் எஸ்.சிவராஜா தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தலைமைத்துவம், தொடர்பாடல் திறன், நிதி முகாமைத்துவம், தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி என பல பயிற்சிகளை வழங்கியது மாத்திரமன்றி அவர்களின் தொழில் முயற்சிக்கு நிதி உதவியுடன் பல தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் எங்களுக்கு உதவி செய்துள்ளார்கள். இந்த நேரத்தில் அனைவருக்கும்
நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன், அம்பாறை மாவட்டத்தில் செயற்றிட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை, பொத்துவில், உகண மற்றும் மகாஓயா பிரதேச செயலக உறுப்பினர்கள், அம்பாறை மாவட்டச் செயலக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஜ.எல்.எம்.இர்பான், பெரேண்டினா நிறுவன திட்ட உத்தியோகத்தர் கயானி, திட்ட இணைப்பாளர் இ.இதயகுமார், அம்பாறை மாவட்ட கணக்கு மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.ஹாதி அஹமட், மட்டக்களப்பு மாவட்ட கணக்கு மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எம்.மதன் எனப்பலர் கலந்து கொண்டனர்.

(றாசிக் நபாயிஸ்)









No comments: