News Just In

12/24/2021 04:33:00 PM

நாட்டில் ஜனவரி முதல் மின்தடை ஏற்ப்படும் -சம்பிக்க ரணவக்க



எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதியின் பின்னர் பெரும்பாலும் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ( Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்திக்கு தேவையான எண்ணெய் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தற்போது கையிருப்பில் இருக்கும் எண்ணெய் தொகைக்கு அமைய அந்த தொகையானது ஜனவரி மாதம் நடுப் பகுதி வரையில் மாத்திரமே போதுமானது.

டிசம்பர் 10 ஆம் திகதி எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தாலும் மின் உற்பத்திக்காக கையிருப்பாக சுமார் 16 ஆயிரம் மெற்றி தொன் சுத்திகரிப்பு எண்ணெய் இருந்தது.தினமும் மின் உற்பத்திக்காக விநியோகிக்கப்படும் எண்ணெய் தொகையானது 500 மெற்றி தொன்னாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையில், இந்த சுத்திகரிப்பு எண்ணெய் 25 நாட்களுக்கே போதுமானது.

மின் உற்பத்திக்காக மேலதிகமாக 12 ஆயிரத்து 500 மெற்றி தொன் எண்ணெயே கையிருப்பில் உள்ளது. இலங்கை மின்சார சபையின் களஞ்சியங்களில் 21 ஆயிரத்து 200 மெற்றி தொன் எண்ணெய் மட்டுமே உள்ளது.கையிருப்பில் இருக்கும் எண்ணெய் தொகை போதுமானதல்ல என்ற காரணத்தினால், அடுத்த மாதத்திற்குள் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கட்டாயம் மூடப்படும்.

இதனால், மின் உற்பத்திக்கான சுத்திகரிப்பு எண்ணெய் விநியோகம் தடைப்படும். இதனால், எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர் பெரும்பாலும் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்.

ஏற்கனவே நாடு முழுவதும் சில பிரதேசங்களில் அறிவிக்கப்படாமல் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிக்காது மின்சாரத்தை துண்டிப்பது மனித உரிமையை மீறும் சட்டவிரோத நடவடிக்கை எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments: