கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எரிவாயு கப்பலிலுள்ள தரமற்ற எரிவாயுவினை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமென லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்தக் கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகள், தரநிர்ணய நிறுவனத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள தரத்திற்கு இணங்காதமையினை சுட்டிக்காட்டியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனம் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு கொண்டு வந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு தேசிய மட்டத்திலான தர நிர்ணயத்தை கொண்டிருக்காத காரணத்தினால் எரிவாயு தொகையை மீண்டும் திருப்பியனுப்ப நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தீர்மானித்தது.
எரிவாயு கசிவு உணர் திறனை தூண்டும் எதில் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் எரிவாயுவில் 15 சதவீத அளவில் காணப்பட வேண்டும்.
நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 3,700 மெற்றிக்தொன் எரிவாயுவில் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் 15 சதவீத அளவிற்கு குறைவான மட்டத்தில் காணப்பட்டமை பரிசோதனை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவற்றை திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சமையல் எரிவாயு தரத்தினை உறுதிப்படுத்தி விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளதாக, லிட்ரோ கேஸ் நிறுவனம், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.இன்றையதினம் இது தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நிறுவனம் இதனை நீதிமன்றுக்கு அறிவித்தது.

No comments: