News Just In

12/24/2021 01:12:00 PM

கடற்றொழிலாளரின்குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஸ்டஈடு - முல்லையில் அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு



சமுர்த்தி திட்டங்களை உச்சபட்சம் பயன்படுத்தி நீர்வேளாண்மையில் ஈடுபடுவதன் மூலம் கடற்றொழில் சார் மக்களுக்கு நிலையான பொருளாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை (23.12.2021) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலின் போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கரைவலை தொழிலில் ஈடுகின்றவர்களின் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், கரைவலை தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், அவை தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, நந்திக்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி உயிரிழந்த ஜெ. செலஸ்ரன் என்பவரின் மனைவி (5 இலட்சம் ரூபாய்) மற்றும் 2 பிள்ளைகளுக்கான (தலா 250,000 ரூபாய்) நஸ்ட ஈட்டு தொகையாக கடற்றொழில் அமைச்சினால் ஒதுக்கப்படட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

அதேபோன்று, நாடளாவிய ரீதியில் இரண்டு இலட்சம் சமூர்த்தி பயனாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுவூட்டும் திட்டத்திற்கு அமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு தலா 250,000 ரூபாய் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் -
"நலிவுற்ற மக்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சமுர்த்தி திட்டங்கள், பாராபட்சமின்றி நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றதன. இதன் ஊடாக சுமார் ஐம்பது இலட்சம் வரையிலான கடன் வசதிகள் உட்பட பல்வேறு நன்மைகளை சமுர்த்திப் பயனாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோன்று கிராமிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக சுமார் 250 இலட்சம் வரையிலான கடனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே, இந்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி, பருவ கால மீன் வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு, கொடுவா மீன் வளர்ப்பு மற்றும் இறால், நண்டு, கடலட்டை ஆகியவற்றுக்கான பண்ணைகளை அமைத்தல் போன்ற நீர்வேளாண்மையில் முடிந்தளவு ஈடுபடுவதன் மூலம் நிலைபேறான பொருளாதாரக் கட்டமைப்பினை எமது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் நாட்டிற்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் பூரணமான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்" என்று தெரித்தார்.முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பொலிஸார், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் கடற்றொழில்சார் திணைக்களங்கள் - சமுர்த்தி ஆகியவற்றின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்ட இன்றைய கலந்துரையாடலில், எல்லை தாண்டி வரும் இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதுமாத்தளன் பகுதியில் மாத்தளன் வீதியை ஊடுருவிச் செல்லும் சாலை களப்பினை பர்வையிட்டிருந்தார்.
இதன்போது மாத்தளன் வீதிப் புனரமைப்பின் போது, களப்பினுள் வீழ்ந்த கற்கள் மற்றும் நீண்டகால பராமரிப்பு இன்மையினால் குறித்த பகுதியில் மீன் பிடிப்பதற்கு முடியாமல் இருப்பதாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சரிடம் முறையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்தப் பகுதிக்கு இன்று நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியை துப்பரவு செய்து ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதேவேளை

முல்லைத்தீவு, நாயாறு களப்பு பிரதேசத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக வீதி விளக்குகளை பொருத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன் விரைவில் அவற்றை பொருத்தி முடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நாயாறு களப்பை நம்பி வாழ்த்து வருகின்ற சுமார் 400 குடும்பங்கள் கொடுவாய் மீன்பிடி மற்றும் இறால் தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற நிலையில், பொருத்தமான இடங்களை தெரிவு செய்து இறால் வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதேச கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக நாயாறு களப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


hussein abdul





No comments: