News Just In

11/17/2021 07:21:00 PM

மட்டக்களப்பில் பெரும்போகத்திற்கான இலவச சேதன திரவப்பசளை விநியோகம் ஆரம்பம்!!

மட்டக்களப்பில் பெரும்போகத்திற்காக அரசினால் வழங்கப்படும் இலவச சேதன திரவப்பசளைகள் விநியோகம் மண்முனைமேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

"பசுமையான நாடு, நஞ்சு விசமற்ற நாளை" எனும் தொனிப் பொருளில் இயற்கை திண்மத் தாவரப் போசாக்கைப் பயன்படுத்தி நெற்செய்கை பண்னும் வேலைத்திட்டத்திற்கமைவாக மண்முனைமேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் மண்டபத்தடி கமநலசேவைகள் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேதன திரவப்பசளை, நனோ நைரஜன் திரவப்பசளை மற்றும் சேதனப்பசளை என்பன வழங்கிவைக்கப்பட்டன.

கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் கே.உதயகுமாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதீன், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே.ஜெகந்நாத் உள்ளிட்ட அதிகாரிகள், சேதன திரவப்பசளை விநியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இத்திரவ சேதனப்பசளை பயன்படுத்தும் விதம் தொடர்பாகவும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இலவசமாக வழங்கப்படும் இத்திரவ சேதனப்பசளை ஒரு ஹெக்டேயருக்கு 10 லீட்டர் என்ற வீதத்தில் வழங்கப்படுகின்றது.

10 நாட்கள் வயது கொண்ட நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 2 லீட்டர் என்ற அடிப்படையில் இத்திரவப்பசளை விசிரப்படவேண்டும். மேலும் முதலாவது விசிரல் செய்யப்பட்டு 10 நாட்களின்பின் இரண்டாவது தடவையாக அதேஅளவில் இப்பசளை விசிறப்படவேண்டும் எனவும், இப்பசளை விசிரப்பட்டு 6 மணித்திற்குள் மழைபெய்யாதிருக்கும் காலத்தினை விவசாயிகள் தெரிவு செய்துகொள்வதுடன் திரவப் பசளை விசிறப்படுவது காலை வேளையாக இருப்பது சிறந்தது எனவும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இன்று வழங்கி வைக்கப்பட்ட இச்சேதன திரவப்பசளை மண்முனைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கும் விநியோகிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments: