News Just In

11/21/2021 06:32:00 PM

உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

விவசாயத்திற்கு தேவையான இரசாயன உரங்களைப் பெற்றுதருமாறு கோரி நுவரெலியாவில் இன்று (21) விவசாயிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

விவசாயிகளுடன் இணைந்து தேரர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். போராட்ட பேரணியானது நுவரெலியா காமினி தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பதுளை - நுவரெலியா பிரதான வீதியினூடாக நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக சென்றடைந்தது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் 2,000 பேர்வரை கலந்து கொண்டனர்.

மேலும் நுவரெலியா, கந்தப்பளை, மீபிலிமான, நானு ஓயா ஆகிய நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்களும் இந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

இதனால் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளும் தடைப்பட்டன. பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தை சாதாரண விலைக்கு வழங்குதல், பூச்சிக்கொல்லிகளை வழங்குதல், நியாயமான விலையில் திரவ உரத்தை வழங்குதல் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது பிரச்சினைகளுக்கு ஒரு வார காலத்துக்குள் தீர்வு வழங்காவிட்டால், மரக்கறிகளை சந்தைக்கு விடுவிப்பதில்லை என்று ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறு கோரி நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவிடம் விவசாயிகள் கையளித்தனர். இந்தப் போராட்டம் காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments: