News Just In

11/24/2021 04:42:00 PM

“தேசியத் தலைவர்” என்ற வார்த்தையால் சிறிலங்கா நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ”தேசிய தலைவர்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், விழித்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை மறுக்கும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ”தேசிய தலைவர்” என்ற பதத்தை பயன்படுத்தினார். இதன்போது பெண் ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல எழுந்து, பயங்கரவாத தலைவர் ஒருவரை இலங்கையின் நாடாளுமன்றத்தில் தேசிய தலைவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து செல்வராஜா கஜேந்திரனின் கருத்துக்களை நீக்குமாறும் சீத அரம்பேபொல கோரிக்கை விடுத்தார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கருத்துரைத்த போது, அது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் உரிமை என்று குறிப்பிட்டார். எனினும் கஜேந்திரனின் கருத்தை நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து நீக்குவது தொடர்பில் தாம் சபாநாயகருக்கு தெரியப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்களும் தேசிய தலைவர் என்ற பதத்தை நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து நீக்கவேண்டும் என்று சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும் அதனை சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரான வேலுக்குமார் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், தமக்கிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், இந்த விடயத்தை சபாநாயகருக்கு அறிவிக்க மாத்திரமே முடியும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கமுடியும். எனினும் அந்த கருத்துக்களை ஏனைய உறுப்பினர்களால் பலவந்தமாக மௌனிக்கச் செய்யமுடியாது என்று குறிப்பிட்டார்.

No comments: