News Just In

10/22/2021 08:07:00 AM

வாகரை காரமுனையில் சிங்கள மக்களை குடியேற்ற முயற்சி – மக்கள் கடும் எதிர்ப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி கிராம சேவையாளர் பிரிவில் காரமுனை பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி கிராம சேவையாளர் பிரிவில் பகுதியில் காரமுனை பகுதியில் 1982ஆம் ஆண்டுக்கு முன்பாக சிங்கள மக்கள் குடியிருந்ததாக கூறி இன்று அவர்களுக்கான நடமாடும் சேவையொன்று புனானையில் உள்ள வனஇலகா திணைக்களத்தில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையினை மத்திய காணி ஆணையாளர் காணி ஆணையாளர் ஜி.கீர்த்தி கமகே மற்றும் கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் ஜி.ரவிராஜன் ஆகியோர் இணைந்து நடாத்தியிருந்தனர்.

இந்த நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணி திணைக்கள மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் காணி உதவி பணிப்பாளர் உட்பட பலர் இணைந்திருந்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் 1982ஆம் ஆண்டுக்கு முன்பாக வசித்ததாக தெரிவிக்கப்படும் சிங்கள மக்களின் ஆவண ங்கள் பரி சோதிக்கப் பட்டு காணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையிலான குழுவினர்,குறித்த செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் எஸ்.சர்வானந்தன்,பிரதேசசபை,மாநகரசபை உறுப்பினர்கள்,பொதுமகக்ள் என பலர் குறித்த நடமாடும் சேவை நடைபெறும் பகுதிக்கு சென்று தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதன்போது அப்பகுதிக்கு பெருமள வான பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்திருந்ததுடன் குறித்த காணி நடமாடும்சேவைக்கும் சிங்கள குடியேற்றத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் எதுவித குடியேற்றமும் செய்யப்படாது எனவும் காணி ஆவணங்களை மட்டும் பரிசோதனைகள் செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்க நடவடிக்கையெடுக்கப்படும் என காணி ஆணையாளரினால் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் உறுதியளித்தார்.

அதனையடுத்து காராமுனைக்கு சிங்கள மக்களும் காணி ஆணையாளரும் சென்று அங்கு காணிகளை பார்வையிட்ட நிலையில் அதற்கு எதிராக அப்பகுதி மக்களும் நாடாளுமன்ற உறுப்பினரும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் காணி ஆணையாளரை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டமும் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து காணி ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் அங்கிருந்து திரும்பிச்சென்றனர் .





No comments: