News Just In

10/27/2021 07:29:00 PM

சமுர்த்தி அருணலு வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் மட்டக்களப்பில் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

நிதியமைச்சின் ஆலோசனையில் சமுர்த்தி இராஜாங்க அமைச்சு அமுல்படுத்திவரும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட சுமார் 2 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டும் சமுர்த்தி அருணலு வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையில் இந்தத் திட்டம் இம்மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெற்றிகரமாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சமுர்த்தி அருணலு வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள 300 வறிய குடும்பங்களுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த சமுர்த்தி அருணலு வாழ்வாதார அபிவிருத்தி உதவி உபகரணங்களை மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள வறிய குடும்பங்களுக்கு ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று காலை வழங்கி வைத்தார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. சத்யானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி. பரீட் சித்தி பாத்திமா மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இங்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து வெளியிடுகையில்; கொரோனா வைரஸ்தொற்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியிலும் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களின் நலன்கருதி தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையில் இரண்டு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக சமூர்த்தி வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் நாடெங்கும் சிறப்பாக அமுல் நடத்தப்பட்டு வருகிறது எனவும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சகலருக்கும் எமது நாட்டில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு கொரோனா வைரஸ் அற்ற நாடாக மாற்றுவதற்கு அரசாங்கம் முழுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது எனவும் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

(மட்டக்களப்புஅப்துல்லத்தீப்) 







No comments: