News Just In

10/27/2021 07:13:00 AM

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இல்லை - தேர்தல்கள் ஆணைக்குழு

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை எத்தேர்தல் முறையிலாவது நடத்துவதற்கான தீர்மானத்தை பாராளுமன்ற மட்டத்தில் முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா, என்பதை கருத முடியவில்லை. என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தயாராவுள்ளது எனவும் தெரிவித்தார்.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும்குறிப்பிடுகையில்,
மாகாண சபை தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கல் முறைமை காரணமாக மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் முறைமையானது 50 வீதம் தொகுதி முறைமை மற்றும் 50 வீதம் விகிதாசார முறைமை என மாற்றியமைக்கப்பட்டது. புதிய தேர்தல் முறைமை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அப்போது நிறைவேற்றப்பட்டது.

எனினும் புதிய தேர்தல் முறைமைக்கு அமைய உருவாக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது. எல்லை நிர்யண அறிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எல்லை நிர்ணய மீளாய்வு குழு நியமிக்கப்பட்டு, மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்க்கிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இருப்பினும் மீளாய்வு குழுவினர் எல்லை நிர்யண குழு அறிக்கை தொடர்பில் மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

எல்லை நிர்யண ஆணைக்குழுவின் அறிக்கை இல்லாத பட்சத்தில் புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத நெருக்கடியான சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை திருத்தம்செய்யப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் அவ்வறிக்கை குறித்து அவதானம் செலுத்தபடவில்லை.

ஆகவே மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் இம்முறை மாத்திரம் நடா த்தி  பிற்பட்ட காலத்தில் புதிய தேர்தல் முறைமையை அப்போதைய சூழலுக்கு அமைய திருத்தியமைக்க முடியும் என ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை பாராளுமன்றம் முன்னெடுக்க வேண்டும்.

மாகாணசபை தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வை காணாமல் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது. மாகாண சபை தேர்தல் தொடர்ந்து பிற்போடப்படுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது. ஆகவே எத்தேர்தல் முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். மாகாண சபை தேர்லை விரைவாக நடத்துவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் பாராளுமன்ற மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றனதா என்பது சந்தேகத்திற்குரியது.

உள்ளுராட்சிமன்றங்களின் பதவி காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் நிறைவுப்பெறும். உள்ளுராட்சிமன்ற தேர்தலின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஆறு மாதத்திற்குள் தேர்தலை நடத்தவும்,அல்லது உள்ளுராட்சிமன்றங்களின் பதவி காலம் முடிவடையும் தினத்திலிருந்து ஒரு வருட காலத்திற்கு தேர்தலை பிற்போடும் அதிகாரம் மாநாகரசபை, நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தல் சட்டங்களின் ஊடாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதில் எவ்வித சட்ட சிக்கலும் கிடையாது, சுகாதார பிரச்சினைகள் மாத்திரம் காணப்படுகிறது. அரசாங்கம் அனுமதி வழங்கினால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளது என்றார்.

No comments: