News Just In

8/04/2021 06:34:00 PM

தமிழ் இன விகிதாசாரத்தை குறைத்தமைக்கான பரிசாகவே வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டது- சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி!!


அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ கிராம பிரிவை சேர்ந்த 1,417 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுடன் இணைத்து தமிழ் இன விகிதாசாரத்தை குறைத்தமைக்கான பரிசாகவே வவுனியா அரச அதிபராக இருந்த சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் இன விகிதாசாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது .அதற்காகவே காணி அபகரிப்புக்களும் சிங்கள குடியேற்றங்களும் தமிழர் பகுதிகளில் அரங்கேற்றப்படுகின்றன. இதற்கு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களும் எம்.பி.க்களும் சலுகைகளுக்காக துணைபோகின்றனர். இன அழைப்பை இவர்கள் மௌனிகளாக வேடிக்கை பார்க்கின்றனர். எனவே தமிழினம் அழிவதற்கு காரணமாகிவிட வேண்டாமென இவர்களிடம் வேண்டுகின்றேன்.

வடக்கில் தமிழ் இன விகிதாசாரத்துக்கு ஆபத்து ஏற்படப்போகின்றது. இதேவேளை முல்லைத்தீவில் கோட்டாய கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதில் 339 ஏக்கர் காணிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இருந்த காணிகள், இக்காணியை சுவீகரிக்கின்ற நில அளவைத் திணைக்களத்துக்கு எதிராக, கடற்படைக்கு எதிராக அண்மையில் காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தியிருந்தார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாமும் கலந்து கொண்டோம். அப்போது இது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு கடற்படையிடம் கேட்டிருந்தோம் என்றார்.

No comments: