News Just In

7/19/2021 02:52:00 PM

மட்டக்களப்பு- சாரணர் சங்கத்தினரால் சுகாதாரத் துறைக்கு தேவைப்பாடாகவிருந்த கொவிட் உபகரண தொகுதிகள் வழங்கிவைப்பு!!


மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் கொவிட் நோயாளர்களை பராமரிக்கும் சிகிட்சை நிலயங்களிற்கு பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் நிலவிவரும் நிலையில் அவற்றில் சிலவற்றை சுகாதார அமைச்சினால் நிறைவேற்றி வந்தாலும் மேலதிக தேவைகளை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களும் செல்வந்தர்களும் மனிதாபிமான அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக மாவட்டத்தில் கொவிட் நிலையினை வெகு விரைவில் கட்டுப்படுத்துவதற்கு பாரிய பங்காற்றி வருகின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினால் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான கொவிட் உபகரண தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (19) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் அவர்களது முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் உயரதிகாரிகளிடமும் குறித்த உபகர ணத் தொகுதிகள் கையளிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் உதவி மாவட்ட முகாமையாளர்களான பி.சசிகுமார், ஏ.குணரெட்ணம், ஏ.புற்கரன் மற்றும் திரு சாரணர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்கத்தின் ஆணையாளர் விவேகானந்தா பிரதீபன் அவர்களினால் இலங்கை சாரண சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக குறித்த உபகரணத் தொகுதிகள் உலக சாரணர் சங்கத்துடன் கொழும்பு சென் தோமஸ் கல்லூரி பழைய சாரணர் சங்கத்தினர் இணைந்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments: