News Just In

7/01/2021 03:13:00 PM

குரங்கின் கையில் பூமாலையாக மட்டக்களப்பு மாவட்டம் - பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கவலை...!!


மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று மட்டக்களப்பின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது. மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலைமை. அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலைமை. ஏன் என்றால் இன்றைய இந்த கூட்டத்திற்கு கூட நான் அமைச்சரிடம் பேசியே வருகை தந்துள்ளேன்.

மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற முக்கிய கூட்டங்களுக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. கூட்டமைப்பின் சார்பில் இங்கு நாங்கள் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். எனினும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.

இதன் காரணமாகவே இன்றைய தினம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன் ஜனா வருகை தரவில்லை. மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பதற்கு தேவையாகவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து எங்களிடம் முன்மொழிவுகள் உள்ளன.

எனினும் அவற்றினை முன்வைப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைப்பது இல்லை. எங்களையும் கூட்டங்களுக்கு அழைத்தால் நாங்களும் முன்மொழிவுகளை முன்வைப்போம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல திட்ட முன்மொழிவுகளை அமைச்சரிடம் கையளித்துள்ளார்.

குறிப்பாக உல்லாச பிரயாணத்துறை வளர்ச்சி சம்பந்தமான சில திட்டங்களில் இவ் துறையோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதனையும், மட்டக்களப்பு மாவட்ட உல்லாச பிரயாணத்துறையை மேம்படுத்துவதிலுள்ள நன்மைகள் சம்பந்தமாகவும் இதன் மூலம் ஏற்படும் வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாகவும் சிலபல திட்ட முன்மொழிவுகளை கையளித்துள்ளார்.

அதில்
1. இயற்கையாகவே மட்டக்களப்பில் பறவைகள் சரணாலயமாக காணப்படும் மாந்தீவும் அதனை எவ்வாறு சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தலாம்.

2. மட்டக்களப்பில் ஒந்தாச்சிமடத்தில் சுனாமி நினைவு அருங்காட்சியகமும் அதனால் ஏற்படும் நன்மைகளும்.

3. மட்டக்களப்பின் நாவலடி பிரதேசத்தில் மீன் பிடிப்புக்கு பாதிப்பில்லாத வகையில் நீர் விளையாட்டு மையங்களை உருவாக்குவதன் மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை எமது பிரதேசங்களுக்கும் பாரியளவில் வரவழைக்கலாம். இதன் மூலம் சுற்றுலாத்துறையினை மேலும் அபிவிருத்தியடைய வைப்பதோடு தொழில் வாய்ப்புக்களையும் உள்ளூர் வருமானத்தையும் அதிகரிக்கலாம் என்பது பற்றியும்.

4. மட்டக்களப்பில் காணப்படும் சிறு தீவுகளில் முக்கியமாக விளங்கும் பெரிய களம் - எருமைத் தீவினை வினைத்திறனான முறையில் உல்லாசப் பிரயாணத்துறைக்கு ஏற்ற வகையில் தீம் பூங்காக்களாக (Theme Park) மாற்றியமைப்பது பற்றியும்.

5. எமது வளங்களில் ஒன்றாகிய மட்டக்களப்பு வாவியினையும் அதனை அண்டியுள்ள அழகிய வனப்பு மிக்க பகுதிகளையும் எவ்வாறு சுற்றுலாத்துறைக்கு ஏற்றவகையில் உல்லாச படகுத்துறையை அபிவிருத்தி செய்து உள்ளூர் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம் என்பது சம்பந்தமான பல திட்ட மொழிவுகள் சமர்பிக்கப்பட்டன.




No comments: