News Just In

7/09/2021 12:25:00 PM

கல்வியையும் இராணுவ மயமாக்க அரசாங்கம் முயற்சி- பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!!


'நாட்டின் சகல துறைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உற்படுத்தப்பட்டு வருவதைப்போல நாட்டின் உயர்கல்வியும் இன்று இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'நாட்டின் சகல துறைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உற்படுத்தப்பட்டு வருவதைப்போல நாட்டின் உயர்கல்வியும் இன்று இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

1970 களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட காரணம் இந்த கல்வி முறையில் ஏற்பட்ட நிராகரிப்பாகும்.

1948 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் கூட கல்வித்துறையில் ஏற்பட்ட தலையீடுகள் காரணமாகவே எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

கல்வி என்பது ஒரு நாட்டின் முக்கியமான துறையாகும். இது சகலரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாகும். அவ்வாறு இருக்கையில் சகல துறைகளிலும் இன்று இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது.

கொரோனா கட்டுப்பாட்டு நிலைமைகளாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு அமைச்சும் இராணுவத்தின் மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றது.

விவசாயத்திலும் அவர்கள் கை வைத்துள்ளனர். இந்த நிலை இன்று உயர் கல்வியிலும் கை வைக்கும் நிலை உருவாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பு குறித்த கொள்கை என்னவென்பது சகலரும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதும் இராணுவ கொள்கைக்கு கீழ் சிவில் மாணவர்களுக்கும் கற்பிக்கவே முயற்சிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் பின்னர் இப்போது வரையில் இராணுவத்தினர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தால் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு கொடுப்பனவுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றது.

இன்றுள்ள நிலையில் இலங்கைக்குள் இன்னொரு யுத்தத்தில் இராணுவம் ஈடுபட வேண்டிய தேவை வராது, எனவே சர்வதேச சவால்களுக்கே இனி நாம் முகங்கொடுக்க வேண்டும்.

அவ்வாறு என்றால் இராணுவத்தை மட்டும் அல்ல, ஏனைய படைகளையும் பலப்படுத்த வேண்டும். ஆனால் இராணுவத்தை மாத்திரம் பலப்படுத்துவதன் நோக்கம் என்ன.“ எனவும் தெரிவித்துள்ளார்.

No comments: