News Just In

7/01/2021 07:39:00 AM

இன்று வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்- வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை...!!


நாட்டில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று(01) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

காற்றின் வேகமானது 30-40 கிலோமீற்றர் வரை காணப்படுவதுடன், காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசன் துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: