News Just In

7/12/2021 05:36:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் செழுமை நீர்ப்பாசனத் திட்டத்தால் புதிதாக 5000 ஏக்கர் நிலத்தில் பெரும்போக சிறுபோக பயிர்ச் செய்கை!!


கிழக்கு மாகாணத்தில் நெற்செய்கையை மகாபோகம் என்றும் சிறுபோகம் என்றும் இருபெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். இங்கு பயிர்ச் செய்கைக்கு ஈடுபடுத்தும் காணிகளை சிறுநீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்படும் நெற்காணிகள் என்றும், பெரும் நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்படும் நெற்காணிகள் என்றும், மழையை நம்பிச் செய்யும் காணிகள் என்றும் உப பிரிவுகளாக பிரிக்கலாம்.

இதேபோன்று மாற்றுப் பயிர்ச் செய்கைகளையும், தோட்டப்பயிர்ச் செய்கையையும் வகுக்கலாம். அப்படிப்பெறப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகத்தில்193485.5 கெக்ரயார் நிலமும் சிறுபோகத்தில் 80479.5 கெக் நிலமும் பயிர்ச் செய்கைக்கு உள்வாங்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இவ் மாவட்டத்தில் வருடமொன்றுக்கு சராசரியாக 273965.0 கெக்ரயார் நிலம் நெற்செய்கைக்கு உள்வாங்கப்படுவதாகவும் இதனூடாக சராசரியாக 1381742.2 மெற்ரிக் தொன் நெல் அறுவடை செய்யப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

அதே வகையில் மாற்றுப் பயிர் செய்கையையும், தோட்டப் பயிர்ச் செய்கையையும் கணக்கிட முடியும். வருடமொன்றுக்கு சராசரியாக மாற்றுப்பயிர்ச் செய்கைக்கு 16520.1 கெக்ரயார் நிலமும், தோட்டப் பயிர்ச் செய்கைக்கு 4701.2 கெக்ரயார் நிலமும் உள்வாங்கப்பட்டு வருகிறது. இவைகளினூடாக சராசரியாக 21221.3மெற்றிக் தொன் உற்பத்தி கிடைத்து வருகிறது.

இத்திட்டம்பற்றி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் விபரிக்கையில் அரசாங்கம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் நகர்த்தி தொழில் வாய்ப்புகளை வழங்கி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி மக்களையும் நாட்டையும் சுபீட்சமடையச் செய்ய முனைகிறது.

அதனை விரிவு படுத்துவதற்காக விவசாயத்திற்கு தேவையாக இருக்கின்ற குளங்களையும், அணைக்கட்டுக்களையும் திருத்தி நீர்க்கொள்ளவையும், நீர்ப்பாசன வசதியையும் மேம்படுத்தி அதனூடாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்தை வினைத்திறனும், விளைதிறனும் கொண்ட நிலைக்கு மேம்பட வைக்க இருக்கிறது என்றார்.

இத்திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளைச் சேர்ந் 70 குளங்களும் 18 அணைக்கட்டுக்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இவைகளின் தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை. பொதுவான சில குறைபாடுகள் எல்லாக்குளங்களுக்கும் அணைக்கட்டுக்களுக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன. அணைக்கட்டுக்களைப் பொறுத்தவரையில் கலிங்காவும், வாய்க்கால்களும், புதிதாக நிர்மாணிக்கப்படவோ, அல்லது வலுவூட்டப்படவோ இருப்பதோடு அவைகளுடைய கட்டுக்களின் உயரங்கள் மேலும் உயர்த்தப்பட வேண்டும்.

அணைக்கட்டுக்களுக்கு கலிங்கா இருந்திருந்தால் அவை வருடாருடம் உடைப்பெடுத்திருக்கமாட்டாது. அணைக்கட்டுக்ளைப் பொறுத்தவரை கலிங்கா நிர்மாணத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுமென மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியிலாளர் பத்மதாஸன் குறிப்பிட்டார்.

கமநல சேவைத்திணைக்களம் 61 குளங்களையும் 9 அணைக்கட்டுக்ளையும், மத்திய நிர்ப்பாசனத் திணைக்களம் 9 அணைக்கட்டுக்ளையும் 2 குளங்களையும், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 7 குளங்களையும் திருத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான இறுதி முடிவு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் கடந்த மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது. ஆயினும், மட்டக்களப்பு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தில் போதுமான அளவுக்கு கனரக வாகனங்கள் இருப்பதால் அத்திணைக்களம் கமநல சேவைத் திணைக்களத்திற்கு உதவியும், ஒத்தாசையும் வழங்க வேண்டுமென அரசாங்க அதிபர் அத்திணைக்களத்தின் பிரதானி பணிப்பாளர் நாகரெடணத்தை கேட்டுக்கொண்டார். இதற்கு கமநல சேவைத்திணைக்களம் ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திணைக்களத் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் ”மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன செழுமை” திட்டத்திற்கு பெரிதும் ஆதரவளித்துவருவதாக அரசாங்க அதிபர் கே. கருணாகரன் பெருமிதமடைவதை காணக் கூடியதாக இருக்கிறது.

இதே குறைபாடுகள் தெரிவு செய்யப்பட்டிருக்கும் குளங்களுக்கும் பொதுவானவையாக இருக்கின்றனவென்று திணைக்களங்களின் தலைவர்கள் விளக்கினார்கள். மத்திய அரசின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி நாகரெட்ணம், மத்திய அரசின் கமநல சேவை உதவி ஆணையாளர் ஜெகந்நாத் மாகாண அரசின் பிரதி நீர்பாசனப் பணிப்பாளர் எந்திரி ராஜகோபாலசிங்கம் ஆகியோர் தங்களது திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளை கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டனர்.

மத்திய நீர்ப்பாசனத் திணைக்களமும், மாகாண நீர்ப்பாசனத் தினைக்களமும், கமநல சேவைத் திணைக்களமும் தலா 2 குளங்களின் வேலைகளை இப்போது நிறைவாக்கியுள்ளன 88 வேலைகளும் நிறைவுறும்வரை வேலைகள் தொடருமென பணிப்பாளர் எந்திரி நாகரெட்ணம் தெரிவித்தார்.

இந்த 88 வேலைகளும் நிறைவுறும்போது புதிதாக 4000 ஏக்கர் நிலங்கள் இருபோக வேளாண்மைச் செய்கைக்கும், மாற்றுப் பயிர்ச் செய்கைக்கும், தோட்டப்பயிர்ச் செய்கைக்கும் உள்வாங்கப்படுமென எந்திரி ராஜகோபாலசிங்கம் விபரித்தார்.

கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஜெகநாத் கருத்துத் தெரிவிக்கையில் இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கும், தோட்டப் பயிர்ச் செய்கைக்குமாக ஈடுபட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 151,471 ஆகும். இவர்கள் அனைவருமே தங்கள் வாழ்வுக்கு முழுமையாக விவசாயச் செய்கையையே நம்பியுள்ளனர், இவர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் பிரத்தியேகமாக விவசாயச் செய்கைக்கு பங்களிக்கும் நீர்ப்பாசனமுறை மிகவும் முக்கியமானது. நெல் சாகுபடிக்கும், மாற்றுப் பயிர் செய்கைக்கும் மற்றும் தோட்டப்பயிர்ச் செய்கைக்கும். கிழக்கு மாகாணத்தில், பாசன நீர் ஆதாரமாக உள்ளது. இதற்காக நீர்ப்பாசன குளங்கள் இருக்கின்றன

அவை அவற்றின் நீர் கொள்ளவை அடிப்படையாக வைத்து பாரிய, நடுத்தர, சிறிய குளங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 27 பாரிய குளங்களும், 45 நடுத்தர குளங்களும், 873 சிறிய குளங்களும் 18 அணைக்கட்டுக்களும் விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்தை வழங்கி வருகின்றன. இக்குளங்களினதும் அணைக்கட்டுக்களினதும் எண்ணிக்கை காலப்போக்கில் உயரும்.

அரசினால் இப்போது செயற்படுத்தப்பட்டு வருகின்ற நீர்ப்பாசன செழுமைத்திட்டத்தின் கீழ் புதிதாக எந்தக் குளமோ அல்லது அணைக்கட்டோ ஸ்தாபிக்கப்படவில்லை இங்கு கவனத்திவ் கொள்ளத் தக்கது.
தற்போதைய நிலையில் இவ் 88 வேலைத்திட்டங்களும் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு இருபோக வேணாண்மைச் செய்கைக்கும், மாற்றுப் பயிர்ச் செய்கைக்கும், மரக்கறித் தோட்டச் செய்கைக்கும் தங்கு தடையின்றி நீர்ப்பாசனம் வழங்கி வருகிறது. திட்டமிட்டபடி வேலைகள் நிறைவுற்றதும்.

இன்னும் 5000 ஏக்கர் நிலத்திற்கு புதிதாக நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்படும். இதனால், நெற்செய்கை, மாற்றுப் பயிர்ச் செய்கை, மரக்கறித் தோட்டப்பயிர்ச் செய்கை என்பவைகளினூடான உற்பத்திகளும் அதிகரிக்கும், அத்தோடு தொழில் வாயப்புகளும் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் மட்டக்களப்பு மாவட்டம் சுபீட்சத்தை நோக்கி நகரும் என்பது உறுதி.




No comments: