News Just In

6/30/2021 03:27:00 PM

நாட்டின் பால் உற்பத்தி தேவையை பூர்த்தி செய்வதற்கும், சேதன பசளையை உற்பத்தி செய்வதற்குமான அனைத்து வளங்களையும் கிழக்கு மாகாணம் பெற்றிருக்கின்றது!!


(எப்.முபாரக்)
நாட்டின் பால் உற்பத்தி தேவையை பூர்த்தி செய்வதற்கும், சேதன பசளையை உற்பத்தி செய்வதற்குமான அனைத்து வளங்களையும் கிழக்கு மாகாணம் பெற்றிருக்கின்றது  இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவிப்பு.

நாட்டின் பால் உற்பத்தி தேவையை பூர்த்தி செய்வதற்கும், சேதனப் பசளையை உற்பத்தி செய்வதற்கும் அனைத்து வளங்களையும் கிழக்கு மாகாணம் பெற்றிருக்கின்றது என கால் நடைவளர்ப்பு,பண்ணைகள் மேம்பாடு,பால் மற்றும் சார் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார்.

"பால் உற்பத்தியும் நிலையான அபிவிருத்தியும்" எனும் தொனிப்பொருளில் இன்று (30) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் பாண்டிக் கோரளயின் வழிகாட்டலின் கீழ், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முட்டை, இறைச்சி ஆகியவற்றின் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்திருக்கிறது.

இந்தநிலையில் பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைவதற்கு தேவையான அனைத்து வளங்களையும் கிழக்கு மாகாணம் கொண்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் அதிகமான மாடுகள் நன்கு திட்டமிட்டு வளர்க்கப்படாமல் திறந்தவெளியில் போதிய பராமரிப்பில்லாமல் உள்ளதனால் , மாடுகளில் இருந்து, வினைத்திறனான உற்பத்திகளை பெற முடியாமல் இருப்பதாகவும் அதனால் ஒரு சிறந்த ஒழங்கமைக்கப்பட்ட பண்ணை முறை அவசியம் என கிழக்கு ஆளுநர் என்னை சந்திக்கும்போது தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு கால்நடை அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியில் அதிகமான பணத்தை வடமாகாணம் மாத்திரமே செலவு செய்கின்றது. அதே சமயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அதற்கு ஈடாக தற்போது அதிகமான கரிசனை எடுத்து கால்நடை உற்பத்தியை கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்வதற்காக முயற்சி மேற்கொண்டு வருவது மிகுந்த சந்தோஷத்தை தருகின்றது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் அன்னளவாக 1.2 மில்லியன் பசுக்கள் உண்டு. சராசரியாக ஒரு பசுவில் இருந்து 2.8 க்கும் 3 லீற்றருக்கு இடைப்பட்ட பாலையே பெறுகின்றோம்.

இந்த உற்பத்தியை இரண்டு மடங்காகப் மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்ற நேரத்தில் கொரோனா சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது இருந்தாலும் இது ஒரு தேசிய வேலைத்திட்டம் என்ற படியால் நாங்கள் கொரோனா சவால்களுக்கு முகம் கொடுத்தும் இதனை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றோம்.

எங்களுடைய இந்த திட்டம் நிறைவேறும் போதும் காலையிலும் மாலையிலும் இரண்டு தடவைகள் பாலைப் பெற்று இரண்டு மடங்காக பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என நினைக்கிறேன்.

அதாவது, நா ட்டின் பால் உற்பத்தி 40 சதவீதத்திலிருந்து 80 வீதமாக அதிகரிக்கும். மீதி 20 வீதத்தை தான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். இதனை இறக்குமதி செய்வதற்காக பஷில் ராஜபக்ஷ விடே திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

நமது நாட்டில் திட்டமிடப்படாது பாரம்பரியமான முறையில் தான் இன்றும் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகள் சரியாக கட்டமைப்பு ரீதியாக திட்டமிட்டு வளர்க்கும் போது பால் உற்பத்தியை அதிகரிப்பது மாத்திரமன்றி, ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ள சேதனப் பசளை உற்பத்தியையும் அதிகரிக்க முடியும். பண்ணையாளர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மாதமொன்றுக்கு 5000 மெட்ரிக் தொன் கால் நடை கழிப்பொருட்கள் சேருவதாக தகவல்கள் தெரிவக்கின்றன. எனவே, ஒரு முறையான கட்டமைப்பு ரீதியான கால்நடை வளர்ப்பு இடம்பெறும் போது, சேதனப் பசளை உற்பத்தியிலும் கிழக்குமாகாணம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு பிரதான பங்கு வகிக்க முடியும்.

இதன்மூலம் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு இரண்டு வகையான வருமானம் கிடைக்கின்றது ஒன்று பால் உற்பத்தி மூலம் கிடைக்கின்ற வருமானம். அடுத்தது கால்நடைகளில் இருந்து பெறப்படுகின்ற கழிவுகளைக் கொண்டு அவர்கள் உற்பத்தி செய்கின்ற சேதனப் பசளைகளில் இருந்து பெரியதொரு வருமானம் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு காத்திருக்கின்றது.

சேதனப் பசளை உற்பத்தியை கால்நடை வளர்ப்பாளர்கள் உற்பத்தி செய்ய முடியும் உற்பத்தி செய்வதற்காக வேண்டிய சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றது. அவர்களால் அது முடியாது விட்டால் கால்நடையில் இருந்து பெறப்படுகின்ற கழிவுகளை விவசாய அமைச்சின் வழிகாட்டுதலுடன் அதனை அவர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் திட்டங்களை வகுத்து வருகின்றது.

சேதனப்பசளை விவசாயம் மூலம் மக்களை பல்வேறு வகையான நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்.இன்று அதிகமான மக்கள் சிறுநீரக நோய்க்கு உட்பட காரணம் இரசாயன முறையிலான விவசாயமே.எனவே ஆரோக்கியமான சமூகமொன்றை கட்டியெழுப்ப சேதன முறையிலான விவசாயம் தேவைப்படுவதாகவும் எனவேதான் அரசாங்கம் மக்கள் நலன்கருதி இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இக்கலந்துலையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ,கால்நடைவளர்ப்பு,பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டைசார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ். சேனாநாயக்க, திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் உப்புவெளி பண்ணையையும் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.





No comments: