News Just In

6/25/2021 07:44:00 AM

இறுதி நேரத்தில் வருகின்ற போது சிகிச்சையளிக்க சிரமப்படுகிறோம் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே வாருங்கள்- டொக்டர் ஏ.எம்.ஹரீஸ்!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா நோய் முற்றி கடைசி நேரத்தில் வைத்தியசாலைக்கு வரும்போது இலேசாக வைத்திய வசதிகளை வழங்கும் நிலை எங்களுக்கு இல்லை என்று டொக்டர் ஏ.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணி புரிபவன் என்ற வகையில் ஏராளமான கொரோனா நோயாளர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்கள் இறுதி நேரத்தில் வந்து மிகவும் அவதிப்படுகின்றனர்.

கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் நீங்கள் ஆரம்பத்தில் வைத்தியசாலைக்கு வருகின்ற போது நாங்கள் ஒவ்வொரு நாளும் சரியான முறையில் உங்களைக் கண்காணித்து சிகிச்சைகளை முறையாக வழங்க இலகுவாக இருக்கும்.

உங்களது உடலில் ஒட்சிசனின் அளவு மிகவும் குறைவான பிறகு நீங்கள் வைத்தியசாலைக்கு வருகின்ற போது உங்களுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்க மிகவும் கஷ்டப்பட வேண்டும். ஏனென்றால் இறுதி நேரத்தில் நீங்கள் வருகின்ற போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உங்களுக்கான கட்டில்களை எடுத்து சிகிச்சை வழங்குவது இலகுவான விடயமல்ல.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வைத்தியசாலைகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஆகிய இரண்டுமே தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது. குறித்த இரண்டு வைத்தியசாலைகளிலும் சாதாரண கட்டில்கள் 120 மாத்திரமே காணப்படுகிறது.

அத்தோடு, மட்டக்களப்பு வைத்தியசாலையில் மாத்திரமே அதிதீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளது. எனவே, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு இறுதி நேரத்தில் கூடுதலான நோயாளர்கள் வருகின்ற போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளிகளை அனுப்புவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது.

எனவே, இவ்வாறான விடயங்களைக் கவனத்தில் கொண்டு உயிர் ஆபத்துக்களை தவிர்க்க நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே வைத்தியசாலைக்கு வாருங்கள்.

No comments: