News Just In

5/01/2021 04:53:00 PM

சிறுபான்மை அரசியல்வாதிகளை வேட்டையாடுகின்ற நிகழ்வு இல்லாமல் செய்யப்பட வேண்டும் - அமீர் அலி!!


(சுஆத் அப்துல்லாஹ்)
ஜனநாயகத்தை மதிக்காமல் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்துள்ள நிகழ்வு இந்த நாட்டிலே இருக்கின்ற ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகத்தையும் கவலையடையச் செய்திருக்கிறது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி நேற்று கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு இது தொடர்பாக தொடர்ந்ததும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஒரு ஜனநாயக அரசியல்வாதியாவர், முறையற்ற விதத்தில் கைது செய்யப்பட்டுள்ள அவரை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்.

விசேடமாக இந்த நாட்டில் சிறுபான்மை அரசியல்வாதிகளை வேட்டையாடுகின்ற இவ்வாறான நிகழ்வுகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பாகவுள்ளது.

எனவே, இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் ரிஷாத் பதியுதீன் மற்றும் அதனோடு சேர்ந்த அரசியலை மையப்படுத்தி கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

இந்த ஜனநாயகத்தை மதிக்கின்ற சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்னை பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கைது செய்யப்படுவதென்பது எதிர்காலத்திலே இந்த நாட்டில் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் என்பதில் யாரும் இரண்டு வகையான கருத்துக்களை கொண்டிருக்க முடியாது.

எனவே, ரிஷாத் பதியுதீன் செய்த குற்றங்கள் எதுவாக இருந்தாலும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி அதற்குரிய வழிமுறைகள் செய்யப்பட வேண்டுமே தவிர இவ்வாறான கைதுகள் இடம்பெறக் கூடாது. நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்திய முறையில் கைதுகள், விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

No comments: