News Just In

5/15/2021 07:30:00 PM

கிழக்கு மாகாண க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேற்று வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு?- கட்டுரை


2020 ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் அது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன. பெறுபேறுகளின் அடிப்படையில் ஒன்பதாவது மாகாணமாகவே கிழக்கு மாகாணம் உள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேற்று வீழ்ச்சிக்கு ஒரு சில தரப்பினர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பெரும்பாலானோர் வலயக் கல்விப் பணிப்பாளரின் தலைமையிலான கல்விசார் உத்தியோகத்தர்களை நோக்கியே தமது விரல்களை நீட்டுகின்றனர். இந்த விமர்சனம் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது?

எமது நாட்டின் கல்வி முறையானது பரீட்சையை மையமாகக் கொண்டது என்பது யாவரும் அறிந்ததே. 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையானது பெற்றோர்களின் பரீட்சையே என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. மேலும் க.பொ.த சாதாரணதர பரீட்சையானது பாடங்களை மனனஞ்செய்து ஒப்புவித்து சித்திபெற முடியும் என்கின்ற கருத்தும் பொதுவாக சொல்லப்படுகின்றது. ஆனால் க.பொ.த உயர்தர பரீட்சை என்பது அவ்வாறில்லை. பிள்ளைகள் சுயமாக உணர்ந்து, விளங்கி, புரிந்துகொண்டு தோற்றவேண்டிய பரீட்சையாகும். இப்பரீட்சையில் மாணவர்கள் தமது இலக்கை அடைய முடியாமல் போவதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தலாம்.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் அவர்களது உளநலத்திலேயே பெரிதும் தங்கியிருக்கின்றது. கற்றலுக்கான ஆர்வம்> கருத்தூன்றல்> கிரகித்தல்> ஞாபகம்> நுண்ணறிவு விருத்தி என கற்றலில் எல்லாப் பகுதிகளும் ஒழுங்காக நடைபெறுவதற்கு மாணவர்களது உளம் நலமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஞாபகம் என்பதில் புலன்வழி ஞாபகம்> குறுங்கால ஞாபகம்> நீண்டகால ஞாபகம் எனவும் பகுத்துப் பார்க்கலாம். புலன்வழி ஞாபகம் என்பது ஒரு சில வினாடிகளே மனதில் இருக்கும். குறுங்கால ஞாபகம் சில நிமிடங்களே நீடித்திருக்கக்கூடியது. உதாரணமாக பாடசாலையிலும் பிரத்தியேக வகுப்புகளிலும் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்படும் கற்பித்தலானது விரிவுரை முறையில் அமையும் பொழுது அது குறுங்கால ஞாபகமாகவே இருக்கும். அக்குறுங்கால ஞாபகம் நீண்டகால ஞாபகமாக நீடித்திருக்க வேண்டுமெனில் பிள்ளை சுயகற்றலில் ஈடுபடவேண்டும். அதாவது பாடசாலையிலும் பிரத்தியேக வகுப்புகளிலும் கற்றவற்றை வீட்டிலிருந்து சுயமாகக் பிள்ளை கற்கவேண்டும். நீண்டகால ஞாபகமாக நீடித்திருக்கும் ஒரு உத்தியாகவே வீட்டுவேலை எனும் பெயரில் பயிற்சிகள் ஆசிரியர்களினால் வழங்;கப்படுகின்றன.

க.பொ.த உயர்தரம் கற்கும் பெரும்பாலான மாணவர்கள் பாடசாலையிலும் பின்னர் பிரத்தியேக வகுப்புகளிலும் கல்வி கற்று இரவு வேளைகளிலேயே வீட்டுக்குத் திரும்புகின்றனர். இதனால் அவர்கள் களைப்படைந்து உணவுண்டு நித்திரைக்குச் செல்லுகின்றனர். பாடசாலையிலும் பிரத்தியேக வகுப்புகளிலும் கற்றவை குறுங்கால ஞாபகமாகவே இருக்கும் என்பதையும் பிள்ளை சுயகற்றலில் ஈடுபடும்போதுதான் அவை நீண்டகால ஞாபகமாக நீடித்திருக்கும் இருக்கும் என்பதையும் எத்தனை பெற்றோர் அறிந்திருப்பர். மேலும் குழுவாக கற்றல்> செய்முறை போன்றவற்றின் மூலமும் நீண்டகால ஞாபகத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9A என்ற பெறுபேற்றை பெற்ற பிள்ளைகளில் சிலர் க.பொ.த உயர்தர பரீட்சையில் 3W பெறுகின்ற சந்தர்ப்பங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9A சித்தி பெற்ற பிள்ளைகள் மிகவும் கெட்டித்தனமுள்ள பிள்ளைகளே. அவ்வாறான பிள்ளைகள் ஏன் க.பொ.த உயர்தர பரீட்சையில் 3W பெறுகின்றனர் என்ற கேள்வியும் பலரிடமுள்ளது. அதற்கும் சில காரணங்கள் உண்டு. மேற்குறிப்பிட்டதுபோல நீண்டகால ஞாபகத்தைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமையும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அடுத்து பிள்ளைகள் பாடத்துறையையும் பாடங்களையும் தெரிவுசெய்வதில் உள்ள அழுத்தங்களும் ஒரு காரணமாக அமையலாம். க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9A சித்தி பெற்றால் பெரும்பாலும் விஞ்ஞானம்> கணிதம் ஆகிய துறைகளைத் தெரிவு செய்வதில் பெற்றோர்களும் அவர்களை வழிப்படுத்துபவர்களும் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பிள்ளையின் விருப்பம்> இயலுமை போன்றவற்றைக் அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.

மேலும் அதிபர்களில் சிலர் தமது சேவைக்காலத்தின்போதே க.பொ.த உயர்தர வகுப்பை தமது பாடசாலையில் புதிதாக ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தேவைப்பாடு> போதிய வளம், பிள்ளையின் விருப்பம்> இயலுமை போன்றவற்றைக் கருத்தில்கொள்ளாது அவசர அவசரமாக தமது நோக்கத்தை அடைய முயற்சிப்பதும் க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமையலாம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களும் சிந்திக்கவேண்டும்.

வலயக் கல்வி அலுவலகங்களைப் பொறுத்தவரையில் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கான வசதி வாய்ப்புக்களையும்> பயிற்சிகளையும்> ஆலோசனைகளையுமே வழங்க முடியும். மாகாணக் கல்வித் திணைக்களத்தினது பணியும் அவ்வாறே. ஆனால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் பாடசாலை அதிபரும் ஆசிரியர்களுமே என்பது மறுக்கமுடியாத உண்மை. வலயக் கல்விப் பணிப்பாளரும் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்களும் குறித்த பாடசாலையை வருடத்தில் ஒரு சில நாட்கள் மாத்திரமே தரிசித்து உரிய ஆலோசனைகளை வழங்க முடியும். ஏனெனில் ஒவ்வொரு வலயத்திலும் சுமார் அறுபது பாடசாலைகள் உள்ளது. ஆனால் மாணவர்களுடன் முழுநேரமும் பாடசாலையில் இருப்பவர்கள் அதிபரும் ஆசிரியர்களுமே. அவ்வாறிருக்கையில் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களை மாத்திரம் நோக்கி விரலை நீட்டுவதென்பது சம்பந்தப்பட்டோர் தங்களை மறைத்துக்கொள்ளும்; உபாயமோ என எண்ணத்தோன்றும்.

கற்றல் செயற்பாடுகளைப்போல் கற்பித்தல் செயற்பாடும் உள ஆரோக்கியத்துடன் தொடர்புபட்டது. ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதனால் வினைத்திறனும் விளைதிறனுமிக்க கற்பித்தல் செயற்பாடுகளை அவர்களிடமிருந்து எதிர்பார்க்கமுடியாது. அதேபோல் ஆசிரியர்களும் தம்மை நம்பி வந்துள்ள பிள்ளைகளுக்காகவும் எதிர்பார்ப்புடனுள்ள பெற்றோர்களுக்காகவும் தமது ஆத்மார்த்தமான புனிதமான பணியை சிறப்புற மேற்கொள்ளவேண்டுமென சமூகம் எதிபார்க்கின்றது. வழிகாட்டலும் ஆலோசனைக்கும் பொறுப்பான ஆசிரியர் மாணவர்கள் பொருத்தமான பாடத்துறையையும் பாடங்களைத் தெரிவு செய்வதற்கு உறுதுணையாக இருப்பதுடன் பொதுப்பரீட்சைகளில் சித்தியடைவதற்கும் ஒரு பாடத்திலேனும் சித்திபெற முடியாத நிலையைத் தடுப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

அத்துடன் பாடசாலை மட்டத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் தமது பாடரீதியாக பகுப்பாய்வு செய்து மாணவர் நிலையை இனங்கண்டு அதற்கேற்ப கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளும்போது நிச்சயம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துகொள்ளமுடியும். வலயக் கல்வி அலுவலகத்தினது வெளிவாரி மதிப்பீடானது எவ்வளவு முக்கியமானதோ அதனை விட பாடசாலைகளில் அதிபர்களினால் மேற்கொள்ளப்படும் உள்ளக மேற்பார்வையானது பன்மடங்கு மாணவர்களின் அடைவுமட்டத்தை உயர்த்திக்கொள்ள வழிசமைக்கும் என்பது திண்ணம்.
மேலும் ஒரு பாடசாலையில் தரம் ஒன்றில் சேருகின்ற பிள்ளையொன்று அதே பாடசாலையில் கற்று பின் க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்திபெற முடியாத நிலையும் காணப்படுகின்றது. ஏன் ஒரு பாடத்திலேனும் சித்திபெற முடியாத பிள்ளைகளும் பாடசாலைகளில் உள்ளனர். பிரபல பாடசாலைகளிலும்கூட இவ்வாறான நிலை கண்கூடு. இப்பிள்ளைகளின் நிலைக்கு யார் பொறுப்பு? நாம் சற்று அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானதும் தத்தமது பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான பிள்ளைகளினதும் சித்திபெற்ற பிள்ளைகளினதும் விபரங்களை சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியிடுகின்றனர். ஆனால் பரீட்சைக்குத் தோற்றிய மொத்தப் பிள்ளைகளின் தொகை> சித்திபெறத் தவறிய பிள்ளைகளின் எண்ணிக்கை> ஒரு பாடத்திலேனும் சித்திபெற முடியாத பிள்ளைகளின் எண்ணிக்கை போன்ற விபரங்களையும் இணைத்து ஏன் வெளியிடுவதில்லை. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான பிள்ளைகளின் பின்னால் நாம் மறைந்துகொள்கின்றோமா? பாடசாலை வாசலில் காட்சிப்படுத்தும் பெனர்களில் கூட இவ்வாறான விபரங்களை வெளியிடுவதில் அதிபர்> ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு முழு விபரங்களையும் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடும்போது நிச்சயம் எதிர்வரும் வருடங்களில் அவற்றில் நேரான மாற்றங்களை ஏற்படுத்த அது ஏதுவாக அமையலாம்.

ஆகவே மாணவர்களிடமிருந்து சிறந்த பெறுபேற்றைப் எதிர்பார்ப்பது என்பது ஆசிரியர், அதிபர், மாணவர், பெற்றோர், சகபாடிகள், வலயக் கல்வி அலுவலகம், மாகாணக் கல்வித் திணைக்களம், மாகாணக் கல்வி அமைச்சு போன்ற ஆளணியினரின் ஒரு கூட்டுமுயற்சியே. எனினும் இதில் அதிக பொறுப்புவாய்ந்த செல்வாக்குச் செலுத்தும் ஆளணியினர் யார் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிந்திப்போம்! செயற்படுவோம்!
முத்துராஜா புவிராஜா
முதன்மை உளவளத்துணையாளர்

No comments: