News Just In

5/16/2021 01:49:00 PM

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் துறைமுக நகர சட்டமூலத்தை அவசரமாக சமர்ப்பிப்பது சீனாவின் அழுத்ததித்தினாலா?-இம்ரான் மஹ்ரூப்!!


எப்.முபாரக்
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் துறைமுக நகர சட்டமூலத்தை அவசரமாக சமர்ப்பிப்பது சீனாவின் அழுத்ததித்தினாலா?-இம்ரான்

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் துறைமுக நகர சட்டமூலத்தை அவசரமாக சமர்ப்பிப்பது சீனாவின் அழுத்ததித்தினாலா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார்.

இன்று (16)காலை கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் பல முதன்மையான பிரச்சினைகள் உள்ள நிலையில் ராஜபக்ஷ அரசு இந்தவாரத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை அவசர அவசரமாக பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதில் பலத்த சந்தேகங்கள் உள்ளன.

கொரோனா அபாயம் இன்று நாட்டில் தலைவிரித்தாடுகின்றது. அதனை ஒழிக்க இருந்த சந்தர்ப்பத்தை தனது மௌட்டீக செயற்பாட்டால் இந்த அரசு உதாசீனம் செய்தது. இனவாத அரசியலுக்கு தீனி போட்டு சமூகத்தில் கொவிட் வளர களம் அமைத்துக்கொடுத்தது. கடைசியில் தன்னை நம்பிய 69 இலட்சம் பேரை மட்டுமன்றி முழு நாட்டையும் மரண பீதியில் வைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள எத்தனிக்கிறது.

20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்பிக்களுக்கு இப்தாரில் இதுபற்றி பேசப்பட்டதாக கதைகள் வருகின்றன. அவர்களது ஆதரவும் இதற்கு கிடைக்க கூடும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிட்சை அளிக்கும் வசதிகளை பெறவே இவ்வாறு கைதூக்கினோம் என்று நாளை அவர்கள் கூறினாலும் ஆச்சர்யமில்லை.

நாட்டின் பாதுகாப்பு , சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களோடு தொடர்பு பட்ட இந்த சட்டமூலம் பலத்த விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பெற்றுள்ள நிலையில் சீனாவின் அழுத்தம் காரணமாகவா அவசர அவசரமாக நிறைவேற்றப்பட போகின்றது என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.

இந்த அரசாங்கத்தில் அரிசி உட்பட உணவுப்பொருட்களுக்குப் போன விலையேற்றத்தைப் பாருங்கள்.
அதுபோல கழிவறை கொமோட் ஒன்றின் விலை 19500 இலிருந்து ஒரேயடியாக 35000 ரூபாவுக்கு விலை கூட்டப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பிரஜைகளை இந்த அரசு ஒழுங்காக உண்டு களிக்கவோ ஒழுங்காக உண்டதைக் கழிக்கவோ முடியாத நிலைமைக்கு தள்ளியுள்ளது. இந்த நிலைக்கும் அப்பால் இதுபோன்ற சட்ட மூலங்களை மக்களது அவல நிலைமைகளை சாதகமாக்கி சட்டமாக்குவதன் மூலம் மக்கள் முதுகில் அடிமைச் சாசனத்தை வரைந்து இந்த அரசு இலங்கையர்களை எதிர்காலத்தில் அந்நியர்களுக்கு அடிமைகளாக்க முனைகிறது.

தமது அரசியல் இருப்பையும் பிழைப்பையும் பாதுகாக்க அரச தரப்பும் அதற்கு ஆதரவளிக்கும் சுய இலாபங்களை குறித்து மட்டுமே சிந்திக்கும் கூட்டமும் எடுக்கும் இந்த முயற்சியினால் முழு நாட்டு மக்களும் பாதிக்கப்பட போகின்றார்கள்.

எனவே இந்த அசாதாரண சூழலில் இத்தகைய சட்டமூலத்தை கொண்டு வருவதை பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் கடுமையாக எதிர்க்கின்றோம். இந்த அடிமைச்சாசன அரசியலுக்கு பதிலாக மக்களது உயிரச்சம் நீங்க காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றோம்.

No comments: