News Just In

4/04/2021 09:18:00 PM

அனைத்து நுண்கடன்களையும் இரத்து செய்யக் கோரி ஒன்றிணைவோம்- கிழக்கு மாகாணப் பெண்கள் வலையமைப்பு!!


இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் வாழும் வறிய மக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்டு வரும் நுண்கடன் திட்டங்களின் பாதிப்பிலிருந்து பெண்கள் மீள்வதற்கான போராட்டத்தில் நாம் ஒன்றிணைவோம்.

பலவேறுவிதமான ஒடுக்குமுறைகள் காரணமாக வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த இலட்சக்கணக்கான மக்களுடன் கடந்தகால யுத்த நிலைமைகளாலும் இயற்கை அனர்த்தங்களாலும் மேலும் ஏராளமான மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்பொழுதுள்ள கொரோனா தாக்கத்தால் தொழில் இழப்புக்கள் காரணமாக இன்னும் பல இலட்சம்பேர் வறுமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களை வறுமையிலிருந்து நீக்கும் வகையிலான பொருளாதார உதவிகளே தேவை - அதற்குப் பதிலாக அவர்களை எக்காலத்திலும் மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளி உயிர்வாழ முடியாத சூழலை நுண்கடன் திட்டங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நுண்கடன் நிதி வழங்கும் நிறுவனங்களும் வங்கிகளும் வறிய மக்களைத் தேடிச்சென்று, வறுமையிலிருந்து மீளலாம் என்று ஆசை காட்டப்பட்டு கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன் வழங்கப்படும் மக்களது மீளச் செலுத்தும் தகைமையைக் கணக்கெடுக்காது, போதுமான தகவல்கள் வழங்கப்படாது, வறிய பெண்களையே ஒருவருக்கு ஒருவர் பிணையாக்கி நுண்கடன்கள் வழங்கப்படுகின்றன.

கடன் வழங்கப்பட்டதன் மூலம் வலுவிழக்க வைக்கப்பட்ட இந்த மக்களிடம் ஏற்கனவே இருந்த வளங்களும், அன்றாடம் உழைப்பதும், இனி எக்காலத்திலும் உழைக்கப் போவதும் வட்டியாகவும் சேமிப்பு, காப்பீடு போன்ற வேறு காரணங்கள் காட்டியும் சுரண்டப்படுகின்றது. அவர்களது கையறுநிலையானது அடிமைகள் போல நடாத்தப்படுவதற்கும், பாலியல் ரீதியான சுரண்டலுக்கும் வழிவகுத்துள்ளது. அவர்கள் சட்டரீதியாக குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர்.

இக்காலப்பகுதியிலிருந்த எந்த அரசுகளும் மக்களின் உரிமைகளை காக்கும் வகையிலான கட்ப்பாடுகளை நிதி நிறுவனங்கள் மீது கொண்டுவரவில்லை.

இதுவரை நுண்கடன் வழங்கப்பட்டதன் மூலம் பெண்கள் அபிவிருத்தி அடைந்துள்ளார்களா என்பது பற்றிய மதிப்பாய்வுகளோ, பெண்களுக்கு நுண்கடன் வழங்குவதன் மூலம் நிதி நிறுவனங்கள் உழைத்த பணத்துக்கான கணக்கறிக்கைகளோ செய்யப்பட்டதாகத் தெரியவில்லை - அவை மக்களின் பார்வைக்கு கிடைக்கவில்லை.

சுரண்டப்பட்டுக்கொண்டும், வன்முறைக்கு உட்படுத்தப் பட்டுக் கொண்டும், வறுமையிலும், உரிமைகளற்றும் வாழும் மக்களைக் கொண்ட எந்த சமூகமும் ஒட்டுமொத்தமாக உரிமைகளை அனுபவிக்கும், தன்மானத்துடன் வாழும் சமூகங்களாகக் கருதப்பட முடியாது. எனவே குறித்த எண்ணிக்கையானவர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனையெனினும் நுண்கடன் பிரச்சனையானது முழு சமூகத்தையும் பாதிக்கும் பிரச்சனையாகும். இது இறையாண்மை கொண்ட ஒரு நாட்டினதும் அதி முக்கியமான பிரச்சனையாகும்.

ஆகவே, உரிமையுடனும் தன்மானத்துடனும் மகிழ்வுடனும் வாழ வீரம்பும் சமூகங்களாக நுண்கடன்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைவோம்!!!

இந்நுண்கடன்களுக்கெதிராக தொடர்ச்சியாக பல பிரதேசங்களில் பாரிய போராட்டங்களும் நடைபெற்றுள்ளதுடன் குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெண்கள் தொடர்ந்தும் இதற்கெதிராக குரல் எழுப்பிவருகின்றனர்.

இந்த வகையில் மார்ச் 8ஆம் திகதி முதல் இங்குராங்கொடையில் நுண்கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ச்சியாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பெண்களுடன் கிழக்கு மாகாண அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பினராகிய நாமும் அனைவரும் இணைவோம்!!!

அரசுக்கான எமது கோரிக்கைகள்
· அனைத்து நுண்கடன்களையும் இரத்து செய்யவும்!

· கொள்ளைக்கார கடன் பற்றிய கடன் கணக்குப் பரிசோதனை செய்யும்வரை கடன் மீளஅறவிடுவதை இடைநிறுத்தவும்!

· நுண்கடன்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான நீதி-சட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் உடனே நிறுத்தவும்!

· நுண்கடன்களால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை கிரிப் தரவுகளில் இருந்து அகற்றவும்!

· சமூக முன்னேற்றத்துக்காக பெண்களுக்கான பெண்களால் முன்னெடுக்கும் நிதி முறைமை ஒன்றினை உருவாக்குதல் வேண்டும்!

(கிழக்கு மாகாணப் பெண்கள் வலையமைப்பு - அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பு)

No comments: