News Just In

4/28/2021 09:57:00 AM

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் கைது!!


யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் (26) இடம்பெற்றது.

இந்த தேர்த் திருவிழாவில் கலந்துக்கொண்டிருந்த பெரும்பாலான பக்தர்கள், முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன், தற்சமயம் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேநேரம் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

நாடு தற்சமயம் கொவிட்-19 மூன்றாம் அலையின் அச்சத்தில் உள்ள நிலையில் சன நெருக்கடியினை ஏற்படுத்தும் இது போன்ற பாரிய நிகழ்வுகளுக்கு மே 31 வரை தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: